குழந்தைத் திருமண ஒழிப்பு: அரசின் முதன்மைக் கடமை
- பெண் கல்வியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந் திருக்கும் தமிழ்நாட்டில், இன்றும்கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அந்த முன்னேற்றத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
- ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை ஆகிய நான்கு வட மாவட்டங்களில், ஐந்து நாள்களில் மட்டும் 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
- இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 12, 16, 18 என்று மாற்றம் கண்டு, தற்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்துவது குறித்த விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில், குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது வேதனைக்குரியது.
- குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின்படி (2006) பெண்ணின் திருமண வயது 18, ஆணுக்கு 21.
- இந்தியாவில் ஆண்களும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறபோதும் ஒப்பீட்டளவில் பெண் குழந்தைகளுக்கே அதிக எண்ணிக்கையில் திருமணம் செய்துவைக்கப்படுகிறது.
காரணங்கள்
- பெண் குழந்தை பிறந்தால் செலவு என்று கட்டமைக்கப்பட்ட நம் ஆணாதிக்கச் சமூகத்தில் வறுமை, அறியாமை, வரதட்சிணை, கல்வியறிவின்மை, குடும்ப வழக்கம், மூத்தோர் விருப்பம் போன்றவை பெண் குழந்தைத் திருமணத்துக்குக் காரணமாக அமைகின்றன.
- பெண் குழந்தைகள் பிற சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்து மணந்துகொண்டால், தங்கள் குடும்பத்துக்கு அவமானம் நேர்ந்துவிடும் என்று கருதி, பெரும்பாலான குழந்தைகள் திருமண வயதை எட்டும் முன்பே வலுக்கட்டாயமாகத் திருமண உறவுக்குள் தள்ளப்படுகின்றனர்.
- பருவ வயதைக் கடந்த பிறகு, பெண் குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு இல்லை எனக் கருதிப் பலரும் தங்கள் மகள்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர்.
அரசின் நடவடிக்கைகள்
- இதைத் தடுப்பதற்காகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு சார்பில் திருமண நிதியுதவித் திட்டம், கல்வி உதவித் திட்டம், அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைக் கண்காணிப்பு எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருந்தபோதும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அரசு முயற்சிகளின் போதாமையையே காட்டுகிறது.
கோவிட்-19 க்கு பின்
- தமிழ்நாட்டில் 2019இல் மட்டும் 2,209 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து 2020இல் 3,208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 2021 நிலவரப்படி முந்தைய ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11,553 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் மிகக் குறைவானவையே புகாராகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
- குழந்தைத் திருமணத்தில் நேரடியாகத் தொடர்புடையவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம். இருந்தபோதும், புகார்கள் பதிவுசெய்யப்படாத நிலை, வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதில் ஏற்படுகிற தாமதம் போன்றவை சட்டத்தை மீறுகிற துணிச்சலை மக்களுக்கு அளிக்கின்றன.
இந்தியாவின் நிலை
- 18 வயது நிறைவடைவதற்கு முன்பே, ஆண்டுதோறும் 15 லட்சம் பெண்களுக்கு இந்தியாவில் திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவிக்கிறது.
- குழந்தைத் திருமணத்தால் பெண்களின் கல்வி தடைபடுவதோடு மிக இளம் வயதிலேயே தாயாவதால் உடல்நலக்குறைவு தொடங்கி, உயிரிழப்புவரை மோசமான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
- இதனால், அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. இப்படியான சூழலில், ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது என்பதைக் கருத்தில்கொண்டு, குழந்தைத் திருமணங்களை முற்றாக ஒழிப்பதற்கான பணியில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.