தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்

இராமலிங்க சுவாமிகள் (1823 – 1874)

  • சிறப்பு பெயர் : வள்ளலார்
  • பிறப்பு: அக்டோபர் 5, 1823
  • பெற்றோர்: இராமையா – சின்னம்மை
  • இடம் : மருதூர்
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்க வேண்டுமென்றார். இதை அவர் “ஜீவகாருண்யம்” என்றார். 
  • இறைவன் ஜோதிவடிவானவன் “அருட்பெருஞ்ஜோதி” ஆக இருக்கிறார்.
  • ‘துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்’ எனும் கருத்தினை முன்வைத்தார்.
  • “மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி” என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானது ஆகும்.

வள்ளலாரின் கொள்கைகள்

  • உலகளாவிய சகோதரத்துவம்
  • அனைத்து உயிர்களையும் சமமாக நடத்துதல்
  • சுய ஒழுக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • எவ்வுயிரையும் கொல்லக்கூடாது.
  • புலால் உண்பதை கண்டித்தார்.
  • 1856இல் “சமரச வேத சன்மார்க்க சங்கம்”எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது “சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம்” என 1865 – ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
  • 1866 இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகமான சத்திய தருமசாலையை வடலூரில் நிறுவினார். 
  • 1870-ல் சத்திய ஞான சபையை தோற்றுவித்தார்.
  • அவருடைய தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாகப் புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை ‘மருட்பா’ (அறியாமையின் பாடல்கள்) எனக் கண்டனம் செய்தனர்.
  • திருவொற்றியூர் சிவபெருமான் மீது எழுத்தறியும் பெருமான் மாலை என்னும் நூலையும் வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும் பாடினார்.
  • வள்ளலாரின் கொள்கை ‘ஜீவகாருண்யமும்’, ‘ஆன்மநேய ஒருமைப்பாடுமே’ ஆகும்.
  • பாரதியார் இவரை “புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றினார்.

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்

  1. சின்மய தீபிகை
  2. ஒழிவிலொடுக்கம்
  3. தொண்டமண்டல சதகம்

இயற்றிய உரைநடை நூல்கள்

  1. மனுமுறை கண்ட வாசகம்
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

திருவருட்பா

  • இவர் பாடிய 6000 பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகின்றது. இஃது ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகளாரின் தலைமைச் சீடரானத் “தொழுவூர் வேலாயுதனாரால்” முதல் நான்கு திருமுறைகள் வெளியிடப்பட்டன.

வைகுண்ட சுவாமிகள் (1809 – 1851)

  • பிறப்பு : சாமித்தோப்பு, சாஸ்தா கோவில்விளை, கன்னியாகுமரி.
  • இயற்பெயர் : முடிசூடும் பெருமாள்.
  • இப்பெயருக்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரின் பெற்றோர் அவருடைய பெயரை முத்துக்குட்டி என மாற்றினார்.
  • திருவிதாங்கூர் அரசின், உயர்சாதியினரின் கடுமையான எதிர்ப்புகளிடையே அனைவரும் சமம் எனும் கருத்தினைப் போதித்தார்.
  • வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே “வெள்ளை கறுப்புப் பிசாசுகளின் ஆட்சியென்று” விமர்சித்தார். 
  • திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்த அவர் தெய்வீக அனுபவம் ஒன்றைப் பெற்றார். 
  • வைகுண்டர்” என தன்னை அழைத்துக் கொண்ட அவர் வழிபாட்டின் போது பின்பற்றும் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களைக் கைவிடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
  • 1833ஆம் ஆண்டு சாதிவேற்றுமைகளை ஒழிப்பதற்காகவும் சமூக ஒருங்கிணைப்புக்காகவும் சாமித்தோப்பில் தனது தியானத்தைத் துவக்கினார். 
  • சமூகத்தின் சில குறிப்பிட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தலைப்பாகை அணியக் கூடாது என்றிருந்த நிலையில் வைகுண்டர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அம்மக்களைத் தலைப்பாகை அணியும் படி கூறினார்.
  • இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர உணர்வை வழங்கியதோடு அவர்களுக்குச் சுயமரியாதை சார்ந்த ஊக்கத்தையும் கொடுத்தது.
  • வைகுண்டசுவாமிகளும் உருவ வழிபாட்டை எதிர்த்தார். 
  • வைகுண்டசுவாமிகள் விலங்குகளைப் பலியிடுவதற்கு எதிராக இயக்கம் நடத்தினார்.
  • பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக வைகுண்டசுவாமிகள் ‘சமத்துவ சமாஜம்’ எனும் அமைப்பை நிறுவினார்.
  • அந்நோக்கத்தில் வெற்றிபெறுவதற்காக அனைத்துச் சாதிமக்களும் சேர்ந்துண்ணும் சமபந்திவிருந்துகளை (துவையல் பந்தி) நடத்தினார்.
  • திருவிதாங்கூர் அரசரால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் தனது கொள்கைகளை விட்டுத்தரவில்லை.
  • அவரைப் பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் ‘அய்யா’ (தந்தை) என அழைத்தனர்.
  • அவருடைய சமயவழிபாட்டு முறை ‘அய்யாவழி’ என்றறியப்பட்டது.
  • ‘நிழல் தாங்கல்’ ஐயா வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்பும் இடங்களாகவும், சாதி, இனம் கடந்து சமயநல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் வளர்க்கும் இடங்களாகவும் விளங்குகின்றன.

இயற்றிய சமய நூல்கள்

  1. அருள்நூல்
  2. அகிலத்திரட்டு அம்மானை – வைகுண்ட சாமியின் வாழ்க்கை வரலாற்று பற்றிய நூல் ஆகும். இந்நூல் இவரது சீடர் ‘இராமகோபால்’ என்பவரால் எழுதப்பட்டது.

அயோத்தி தாசர் (1845-1914)

  • இயற்பெயர் : காத்தவராயன்
  • தம் குருவிடம் கொண்ட பாசத்தினால் தன் பெயரை அயோத்திதாச பண்டிதன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.
  • இவர் ஒரு தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும் பத்திரிக்கையாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்.
  • சென்னையில் பிறந்த அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். 
  • நீலகிரி தோடர் இனப்பிரிவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து பத்தாண்டுகள் ரங்கூனில் வாழ்ந்தார்.
  • ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காக பண்டிதர் அயோத்திதாசர் “அத்வைதானந்தா சபா” எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1882இல் அயோத்தி தாசரும் ஜான் திரவியம் என்பவரும் ‘திராவிடர்க் கழகம்’ எனும் அமைப்பை நிறுவினர். 
  • மேலும் 1885இல் ‘திராவிட பாண்டியன்’ எனும் இதழையும் தொடங்கினார்.
  • ‘திராவிட மகாஜனசபை’ என்ற அமைப்பை 1891-இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
  • 1907இல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்திரிக்கையைத் தொடங்கி அதை 1914இல் இவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார். பின்னர் இந்நாளிதழ் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் ‘தமிழன்’ என்ற பெயரோடு வெளிவந்தது.
  • பிரம்மஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் H.S.ஆல்காட் ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாக 1898இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.
  • 1898 ஆண்டில் ‘சாக்கிய பௌத்த சங்கம்’ எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்.
  • பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்.
  • பௌத்தசமய நிலைப்பாட்டிலிருந்து தமிழ் இலக்கியங்களுக்கும் நாட்டார் வழக்காற்றியல் மரபுக்கும் புதிய விளக்கங்கள் கொடுத்த அவர் ஒரு மாற்று வரலாற்றைக் கட்டமைத்தார்.
  • ஒடுக்கப்பட்டவர்களை ‘சாதி பேதமற்ற திராவிடர்’ என அழைத்த அவர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது அவர்களைச் சாதியற்ற திராவிடர்கள் எனப் பதிவுசெய்யுமாறு வற்புறுத்தினார்.
  • இவர் தமிழ் – பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தார்.  

சமூக – சமய சீர்திருத்த இயக்கங்களின் விளைவுகள் 

  • சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள், சமூகத்திலும், சமயத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. 
  • சமூகத்தில் பரவியிருந்த கொடுமைகளான உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணங்கள், தீண்டாமை போன்றவை ஒழிய பெரும் உதவியாக அமைந்தன.
  • பெண்கல்வி, விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணங்கள், சமபந்தி உணவு முறை ஆகியவை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 
  • மக்களிடையே சமுதாய எழுச்சி, தேசிய உணர்வு பெருகிட வழிவகுத்தன.
  • மக்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் அதன் பெருமைகளை அறிந்து கொள்ளச் செய்தன. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!