Contents show
ரூபாய் சர்வதேச மயமாக்கல்
- ரூபாய் சர்வதேச மயமாக்கல் என்பது இந்திய ரூபாய் பணத்தை உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நாணயமாக மாற்றும் செயல்முறையாகும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் உலகின் எந்த இடத்திலும் வர்த்தகம் செய்யலாம் மற்றும் பணம் செலுத்தலாம்.
- ரூபாய் சர்வதேச மயமாக்கலுக்கு பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, இது இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிக்க உதவும். இரண்டாவதாக, இது இந்தியாவின் நாணய ஸ்திரத்தன்மையை மேம்படுத்த உதவும். மூன்றாவதாக, இது இந்தியாவின் பொருளாதாரத்தை உலகில் அதிக போட்டித்தன்மையுடன் ஆக்க உதவும்.
ரூபாய் சர்வதேச மயமாக்கல்: கள யதார்த்தம் என்ன?
- உலக நாடுகளின் அந்நிய செலவாணி கையிருப்பில் 60 சதவீத பங்கு டாலரும் 20 சதவீத பங்கு யூரோவும் பெற்றுள்ளன.உலக வர்த்தகத்தில் 15 சதவீத பங்கை அடைந்திருந்தாலும் சீனாவின் நாணயமான ரென்மின்பி 3 சதவீத அளவிலேயே அந்நிய செலவாணி கையிருப்பாக உள்ளது.
- இந்தியாவின் வர்த்தக பரிவர்த்தனைகளில் 86 சதவீதம் டாலரிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ரூபாயின் பயன்பாடு உலக வர்த்தகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழலில், ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இது எந்த அளவுக்கு சாத்தியம், கள யதார்த்தம் எப்படி இருக்கிறது?
- ரூபாய் சர்வதேசமயமாக்கல் என்பது பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தக பரிவர்த்தனைகளில் ரூபாய் பயன்படுத்தப்படுவதை குறிக்கிறது. ஏற்றுமதி-இறக்குமதி பரிவர்த்தனைகள்,அந்நிய செலவாணி பரிவர்த்தனைகள் மற்றும் மூலதன கணக்கில் முதலீடுகள்,கடன்கள்,நிதி சொத்துகள் பரிவர்த்தனைகள் ரூபாய் அடிப்படையில் மேற்கொள்வதே ரூபாய் சர்வதேச மயமாக்களின் அடிப்படையாகும்.
- 1950-களில் ஐக்கிய அமீரகம்,குவைத்,பஹ்ரைன்,ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இந்திய ரூபாய் சட்டப்பூர்வ பணமாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆனால்1966 -ம் ஆண்டு ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் அரேபிய நாடுகளில் ரூபாய்க்கான தேவையும் பயன்பாடும் முற்றிலும் இல்லாமல் போனது.
தற்போதைய நிலவரம்:
- சர்வதேச அந்நிய செலவாணி சந்தையில் தினசரி சராசரியாக தேவைப்படும் ரூபாயின் அளவு1.6சதவீதம் மட்டுமே.மேலும் சர்வதேச ஏற்றுமதி வணிகத்தில் இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே ஆகும்.இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளாக கருதப்படும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளின் மொத்த வர்த்தகத்தில் முறையே8.6சதவீதமும் 15.6 சதவீதம் மட்டுமே இந்தியாவின் பங்களிப்பாக உள்ளது.எனவே ரூபாய்க்கான தேவை என்பது உலக அளவில் குறைவாகவே இருக்கிறது
- டாலர் மற்றும் யூரோவுடன் ஒப்பிடும் அளவிற்கு உலக அளவில் ரூபாயின் அளிப்பும் புழக்கமும் போதுமானதாக இல்லை.ரூபாயின் புழக்கம் மிகக் குறைவானதாக இருப்பதால் ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டுள்ள சொத்துக்களை வாங்கவோ,விற்கவோ முதலீட்டாளர்களால் முடியவில்லை.
- வெளிநாடுகளில் இருந்து வர்த்தக கடன்களை ரூபாயில் வாங்க அனுமதி மற்றும் சில குறிப்பிட்ட நாடுகளுடன் ரூபாய் அடிப்படையில் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற அனுமதிகள் வழங்கப்பட்டு இருப்பினும் பரிவர்த்தனைகளின் அளவு குறைவாகவே உள்ளது.அதாவது ரூபாய்க்கான தேவை குறைவாகவே உள்ளது.
- உக்ரைன் போரினால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளின் காரணமாக ரஷ்ய வங்கிகளால் உலக அளவில் இயங்க முடியவில்லை.அவற்றின் சார்பாக செயல்பட இந்திய வங்கிகளுக்கு வோஸ்ட்ரா அக்கவுண்ட் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
- ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.இந்தியாவின் இறக்குமதி அதிகரிப்பால் ரஷ்யாவில் ஏற்றுமதியாளர்களிடம் அதிக அளவில் ரூபாய் பணம் சேர்ந்தது.
- ஆனால் ரூபாயில் இந்திய சந்தைகளில் முதலீடு செய்வதை காட்டிலும் டாலரில் முதலீடு செய்வதையே ரஷ்யா ஏற்றுமதியாளர்கள் விரும்புகிறார்கள்.மேலும் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் அளவு குறைவாகவே இருப்பதால் ரூபாயை அதிக அளவில் பயன்படுத்த ரஷ்யாவுக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
- இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தற்போது இந்திய ரூபாய் அண்டை நாடுகளான பூடான்,நேபாளம் ஆகியவற்றில் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இந்த நாடுகள் ரூபாயை வேறு நாடுகளுடான வர்த்தகத்தில் பயன்படுத்த முடியாது.மேலும் மாலத்தீவு,வங்கதேசம் மற்றும் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத நாணயமாக ரூபாய் பயன்படுத்தப்படுகிறது.
சவால்கள்:
- ரூபாயை சர்வதேசமயாக்குவதில் சில சவால்களும் உள்ளன.சர்வதேசமயமாக்களால் ரூபாயின் தேவை அதிகரிக்கும்.இந்தத் தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவில் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிட வேண்டி இருக்கும்.அதே நேரத்தில் அதிக நோட்டுக்களை அச்சிடுவதால் ஏற்படும் பணப்புழக்கத்தின் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கலாம்.
- பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்து நாணய மாற்று விகிதத்தில் மிகப் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.இந்திய அரசின் பணக்கொள்கையில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டாலோ,வெளிப்படைத் தன்மை குறைந்தாலோ ரூபாய் உலக நாடுகளின் ஏற்பு தன்மையை பெற முடியாது.
- பொருளாதார நெருக்கடி நிலையில் ஏற்படுகிற போது வட்டி விகிதங்கள் குறைய ஆரம்பிக்கும்.நிதி சந்தைகளில் ஏற்கனவே அதிக வட்டியில் வாங்கப்பட்ட கடன்களை குறைந்த வட்டிக்கு மாற்றுகின்ற மறு நிதியளிப்பு(Refinancing)பிரச்சனைகள் தோன்றும்.
- உலக அளவில் ரூபாயின் ஏற்புத்தன்மையை தீர்மானிப்பதில் பணவீக்க கட்டுப்பாடு,குறைவான நிதி பற்றாக்குறை,ஜிடிபி வளர்ச்சி,அரசியல் ஸ்திரத்தன்மை,முதலீட்டாளர்களுக்கு சாதகமான சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.
- அந்த வகையில்,ரூபாயை சர்வதேசமயமாக்குவது இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு என்றாலும், தற்போதைய சூழலில் உலக அளவில் டாலர்,யூரோ ஆகிய நாணயங்களுக்கு இணையாக ஏற்புத்தன்மையை பெறுவது என்பது ரூபாய்க்கு மிகப்பெரிய சவாலாகும்.
ரூபாய் சர்வதேச மயமாக்கலை அடைவதற்கு, இந்தியா பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
- இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
- இந்தியாவின் வணிக மற்றும் முதலீட்டு சூழலை மேம்படுத்த வேண்டும்.
- இந்தியாவின் நாணயத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கக்கூடியதாக மாற்ற வேண்டும்.
- ரூபாய் சர்வதேச மயமாக்கல் என்பது ஒரு நீண்ட கால இலக்கு ஆகும். இருப்பினும், இந்தியா இந்த இலக்கை அடைய தொடர்ந்து முயற்சித்து வருகிறது