ஆளுநரின் அதிகாரங்களும், பணிகளும்
- ஆளுநர் மாநில செயல்துறையின் தலைவராகத் திகழ்கிறார். மற்றும் அதிகமான அதிகாரங்களையும் அவர் பெற்றுள்ளார்.
- விதி 163-க்கிணங்க, ஆளுநர் தனது பணிகளையும் அதிகாரங்களையும் செயல்படுத்துகின்றபோது,
- சில குறிப்பட்ட விதிவிலக்குகளைத்தவிர, முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையால் வழிநடத்தப்படுகிறார்.
- மாநில அளவிலான செயல்துறைத் தலைவராக ஆளுநர் பின்வருகின்ற பணிகளையும் அதிகாரங்களையும் பெற்றுள்ளார்.
- செயல்துறை அதிகாரங்கள்
- சட்டத்துறை அதிகாரங்கள்
- நிதி அதிகாரங்கள்
- நீதித்துறை அதிகாரங்கள்
- தன்விருப்ப அதிகாரங்கள், மற்றும்
- இதர அதிகாரங்கள்.
செயல்துறை அதிகாரங்கள்.
- மாநில அரசாங்கத்தின் அனைத்து செயல்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் எடுக்கப்படுகின்றன.
- அவர் முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் நியமிக்கிறார். ஆளுநரின் விருப்பம் உள்ளவரை பதவி வகிக்கின்றனர். அவர்கள்
- அவர் மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரை நியமித்து அவரின் சம்பளத்தை நிர்ணயிருக்கிறார்.
- அவர் மாநிலத் தேர்தல் ஆணையரை நியமித்து அவரின் பணி நிலையையும் பதவிக் காலத்தையும் தீர்மானிக்கிறார்.
- அவர் மாநிலப் பொதுப் பணி ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கிறார். இருப்பினும், அவர்கள் ஆளுநரால் அல்லாமல் இந்திய ஜனாதிபதியால் பதவியிலிருந்து விலக்கப்படலாம்.
- அவர் முதலமைச்சரிடமிருந்து மாநில விவகாரங்கள் தொடர்பான எந்தத் தகவலையும், சட்டமியற்றுதலுக்கான முன்வரைவுகளையும் கேட்கலாம்.
- அவர் எந்த விவாதத்தின் மீதான அமைச்சரவையின் முடிவையும் தன்னிடம் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சரை கேட்கலாம்.
- அவர், தனது பெயரால் அமுல்படுத்தப்படுகின்ற ஆணைகள் தொடர்பான விதிகளை ஏற்படுத்தலாம். ஆனால், அவை நியாமானதாக பிரச்சினைக்கு இடம் தராதவையாக இருத்தல் வேண்டும்.
- அரசாங்க செயல்பாடுகளின் சீர்பாட்டிற்காகவும், அச்செயல்பாடுகளை அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கவும் அவர் விதிகளை ஏற்படுத்தலாம்.
- விதி 356- ன்படி, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த ஜனாதிபதிக்கு அவர் பரிந்துரை செய்யலாம். இவ்வித ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதியின் முகவராக இருந்துகொண்டு விரிவான செயல்துறை அதிகாரங்களை ஆளுநர் செலுத்துகிறார்.
சட்டதுறை அதிகாரங்கள்
- ஆளுநர் மாநிலச் சட்டத்துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார். ஆனால், அவர் சட்டத்துறையின் எந்த அவையிலும் உறுப்பினர் அல்லாதவர். இத்தன்மையில், அவர் பின்வருகின்ற சட்டத்துறை அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
- அவர் மாநிலச் சட்டமன்ற கூட்டங்களைக் கூட்டவோ அல்லது தள்ளிப்போடவோ மற்றும் கீழவையான மாநில சட்ட சபையை கலைக்கவோ உரிமை பெற்றுள்ளார்.
- அவர் பொதுத்தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் ஒவ்வொரு வருடத்தின் முதல் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார்.
- அவர் சட்டத்துறையின் நிலுவையில் உள்ள மசோதா தொடர்பாக இரு சபைகளுக்கும் செய்திகள் அனுப்பலாம்.
- சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் காலியாக உள்ளபோது, சட்டசபையில் உள்ள எந்த உறுப்பினரையும் சபைக்கு தலைமை வகிக்க அவர் நியமிக்கலாம்.
- அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூகப்பணி போன்றவற்றில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் பெற்றுள்ளவர்களை மாநில சட்டமன்றத்தின் மேலவைக்கு ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை அவர் நியமிக்கிறார். (சட்டமன்ற மேலவை 1986ஆம் ஆண்டு நீக்கப்பட்டது).
- ஆங்கிலோ – இந்திய சமூகத்திலிருந்து மாநில சட்டமன்றத்தின் கீழவைக்கு ஒரு உறுப்பினரை அவர் நியமிக்கலாம்.
- தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து மாநில சட்டத்துறை உறுப்பினர்களின் தகுதியின்மை பிரச்சினையை அவர் தீர்மானிக்கிறார்.
- மாநிலச் சட்டத்துறையால் இயற்றப்பட்ட ஒவ்வொரு மசோதாவும் அவரின் கையொப்பத்திற்குப் பின்னரே சட்டமாகும். ஆனால், சட்டத்துறையால் இயற்றப்பட்டு ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அம்மசோதாவிற்கு அவர் சம்மதம் தெரிவிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது சட்டத்துறையின் மறுபரிசீலனைக்காக அந்த மசோதாவை திரும்ப அனுப்பலாம்.
- மாநில உயர்நீதிமன்றத்தின் நிலையை பாதிக்கும் வகையில் சட்டத்துறையால் மசோதா இயற்றப்படுமானால், ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அம்மசோதாவை அவர் ஒதுக்கி வைக்கலாம்.
- விதி 213-ன்படி மாநில சட்டத்துறை கூட்டத்தொடரில் இல்லாதபோது அவர் இடைக்காலச் சட்டங்களை இயற்றலாம். ஆனால், ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஒரு இடைக்காலச் சட்டத்தை எந்த நேரத்திலும் அவர் விலக்கிக்கொள்ளலாம். மற்றும்,
- மாநில அரசின் கணக்குள் தொடர்பான மாநில நிதி ஆணையம், மாநில பொதுப்பணி ஆணையம், தலைமைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் ஆகியோரின் அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தின் முன்வைத்திட அவர் கடமைப்பட்டவராக உள்ளார்.
நிதி அதிகாரங்கள்
- வருடாந்திர நிதிநிலை அறிக்கை எனப்படும் மாநிலத்தின் வரவுசெலவுத்திட்டம் சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க அவர் கடமைப்பட்டுள்ளார்.
- அவரின் முன்பரிந்துரைபெற்ற பின்னரே மாநில சட்டமன்றத்தில் பண மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட முடியும்.
- எந்த ஒரு மானியக் கோரிக்கைக்கும் அவரின் பரிந்துரை விதிவிலக்கு அளிக்கப்படமாட்டாது.
- எவ்வித எதிர்பாராத செலவினத்தைச் சந்திப்பதற்கும் மாநில கூட்டு நிதியிலிருந்து முன்பணத்தை அவர் ஏற்படுத்தலாம். மற்றும்,
- பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு நிதி ஆணையத்தை அவர் அமைக்கிறார்.
நீதித்துறை அதிகாரங்கள்
- ஆளுநர் எவ்வித குற்றத்தின் தண்டனையிலிருந்தும் ஒருவரின் தண்டனையை குறைக்கவோ, தள்ளிவைக்கவோ அல்லது மன்னிப்பு வழங்கவோ முடியும். ஆனால், ஆளுநரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திலிருந்து பின்வரும் வழிகளில் வேறுபடுகிறது.
- மரண தண்டனைக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியும். ஆனால் ஆளுநரால் முடியாது.
- கடற்துறை நீதிமன்ற தண்டனையை ஜனாதிபதி மன்னிக்க முடியும். ஆனால் ஆளுநரால் முடியாது.
- தொடர்புடைய உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமனம் செய்கின்றபோது, ஜனாதிபதியால் அவர் கலந்தாலோசிக்கப்படுகிறார்.
- உயர்நீதிமன்றத்துடனான கலந்தாலோசனையில், மாவட்ட நீதிபதிகளின் நியமனங்கள், பணியமர்த்துதல், பதவி உயர்வளித்தல் போன்றவற்றை அவர் செய்கிறார்.
- உயர்நீதிமன்றம் மற்றும் பொதுப்பணி ஆணையம் ஆகியவைகளுடனான கலந்தாலோசிப்பினால், மாநிலத்தின் நீதித்துறைப் பணிக்குப் பணியாளர்களை அவர் நியமிக்கிறார்.
தன்விருப்ப அதிகாரங்கள்
- ஜனாதிபதியின் பரிசீலனைக்காக எந்த மசோதாவையும் ஆளுநர் அனுப்பிவைக்கலாம்.
- மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியின் அமுலாக்கத்திற்காக அவர் பரிந்துரைக்கிறார்.
- மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்ட விசயங்கள் தொடர்பானத் தகவலை முதலமைச்சரிடமிருந்து அவர் கேட்கிறார்.
- பொதுத் தேர்தலுக்குப் பின்பு சட்ட சபையில் எந்தக் கட்சிக்கும் தெளிவான அல்லது தனிப் பெரும்பான்மை இல்லாதபோது எந்தக் கட்சியின் தலைவரையும் அமைச்சரவை அமைக்க அவர் அழைக்கலாம்.
- அமைச்சரவை நம்பிக்கையை அதன் மீதான சட்ட சபையில் நிரூபிக்க முடியவில்லையெனில், அவர் அமைச்சரவையை நீக்கம் செய்யலாம். மற்றும் அமைச்சரவை தனது பெரும்பான்மையை இழந்தால், அவர் சட்ட சபையை கலைக்கலாம்.
இதர அதிகாரங்கள்
மேலே கூறப்பட்ட பணிகள் மற்றும் அதிகாரங்களுடன், ஆளுநர் பின்வருகின்ற இதரப் பணிகளையும் செயல்படுத்துகிறார்.
- மாநில பொதுப்பணி ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையை ஆளுநர் பெறுகிறார் மற்றும் அவற்றை அமைச்சரவை, மாநில சட்டமன்றம் போன்றவைகளிடம் விவாதத்திற்காகச் சமர்ப்பிக்கிறார்.
- மாநில அரசாங்கத்தில் பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்ட வரவு மற்றும் செலவினம் தொடர்பான பொதுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கையை அவர் பெறுகிறார்.