இந்தியாவின் முதியவர்கள் அதிகரித்தலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்கான அரசின் கொள்கைகளை விளக்கி எழுதுக

இந்தியாவின் முதியவர்கள்

  • இந்தியாவின் எதிர்காலம் இளமையாகவே இருக்கிறது; மக்கள்தொகையில் 50% பேர், 25 வயதுக்குக் கீழே உள்ளவர்களைக் கொண்டிருப்பதால் 2030 இல் இந்தியா வல்லரசாகும் என்கிற கணிப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. 
  • தற்போதைய கணக்கீட்டின்படி அதில் மிகை ஏதுமில்லை; என்றாலும், இதற்கு எதிர்த்திசையில் நாடு எதிர்கொள்ள இருக்கும் சவாலைக் கோடிட்டுக் காட்டுவது அவசியமாகிறது.
  • ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) வெளியிட்ட ‘இந்திய முதியோர் அறிக்கை 2023’, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10.5% (14.9 கோடிப் பேர்) என்றும், 2050இல் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 20.8% (34.7 கோடி) ஆக இருக்கும் என்றும் கூறுகிறது. 
  • இதன்படி, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானால் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான கொள்கைகளை இந்தியா கொண்டிருக்கிறதா?

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்.

  • இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐந்தில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருப்பார் என்று ஐ.நா. குறிப்பிட்டிருக்கிறது. 
  • இதன் பின்னணியில் எழும் மருத்துவம், பொருளாதாரம், சமூகநலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கொள்கைகளை அரசு கொண்டிருக்க வேண்டும்.
  • உதாரணத்துக்கு கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், பிள்ளைகள் சிறப்பான ஊதியத்துக்காக, வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயரும்போது, அவர்களின் பெற்றோர் இங்கு தனியாக வாழ்ந்துவருகின்றனர். 
  • வயது முதிர்ந்த நிலையில், நோயை எதிர்த்துப் போராடும் சூழலில்தான் இந்திய முதியவர்கள் பலரும் உள்ளனர். 
  • சமீப ஆண்டுகளாகச் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இதே போக்குதான் எதிரொலித்துவருகிறது.

பெண்களுக்குக் கூடுதல் சிக்கல்: 

  • இந்தியாவில் உள்ள முதியவர்களில் 40%க்கும் அதிகமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர். 
  • அவர்களில் 18.7% பேர் வருமானம் இல்லாமல் தங்கள் அன்றாடத்தைக் கழித்து வருகின்றனர். 
  • இத்தகைய கடுமையான சூழல் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையும் சுகாதாரத்தையும் பாதிக்கக்கூடும்.
  • ஆண்களுடன் ஒப்பிடும்போது சராசரியாக 60 முதல் 80 வயது வரை பெண்களின் ஆயுள்காலம் அதிகமாக இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. தரவின்படி, இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் குறைவாகப் பங்களிக்கும் பெண்கள், தங்களுடைய முதுமைக் காலத்தில் இன்னும் கூடுதலான சமூக-பொருளாதார நெருக்கடிகளைச் சந்திப்பார்கள்.

முதியவர்களுக்கான கொள்கைகள் 

  • “இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவர்கள் ஆரோக்கியமான, கண்ணியமான, நிறைவான வாழ்க்கையைப் பெறுவதை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது என்று மத்திய சமூக நீதி-அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் செயலாளர் சௌரப் கார்க் சமீபத்தில் கூறியிருந்தார்.
    அதன்படி,

# முதியோரின் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முதியோர் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும்.
# முதியோரின் உடல்நலம், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கொள்கைகளையும் திட்டங்களையும் அரசு வகுக்க வேண்டும்.
# முதியோர் நலனுக்கான கொள்கைகளை வடிவமைப்பதற்காக அதற்கெனத் தனிப்பட்ட அமைச்சரவைக் குழுக்களை அமைக்க வேண்டும்.
# வயது முதிர்வால் அதிகம் பாதிக்கப்படப்போவது பெண்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவர அறிக்கைகள் குறிப்பிடுவதால், அதற்கேற்பத் திட்டங்களை வடிவமைப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
# முதியோர் இல்லங்களில் கட்டாயப்படுத்திச் சேர்ப்பது, முதியோர் மீதான வன்முறை போன்றவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

இந்தியா மட்டுமல்ல: 

  • உலக மக்கள்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 2030இல், உலக மக்கள்தொகையில் 6இல் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. 
  • அதிக எண்ணிக்கையில் முதியவர்களைக் கொண்ட நாடுகளில் ஜப்பான், இத்தாலி, பின்லாந்து முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
  • இதில் முதியோருக்கான நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் நீண்ட காலமாகப் போராடிவருகிறது. 
  • ஜப்பானின் வேலைவாய்ப்புகளில், 65 வயது அல்லது அதற்கும் அதிகமான வயதை உடையவர்கள் 13%க்கும் அதிகமான அளவில் பங்களிக்கிறார்கள். இவை பொருளாதாரப் பாதுகாப்பை அளிக்கும் என்றாலும், நாட்டின் பிற செலவினங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைத் தீர்ப்பதற்கான பாதையில் ஜப்பான் விழிப்புடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. 
  • முதியவர் களின் நலன் சார்ந்து ஜப்பான் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!