நான் முதல்வன் திட்டம்
- நோக்கம்: ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
நான் முதல்வன் திட்டத்தின் சிறம்பம்சங்கள்:
- தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது.
- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
- இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.
- மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.
- தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
- தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
- ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
- மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
- தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.
- இதற்கான பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
- ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும்.
- முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
- கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும்.
- மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.
- தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.
- பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதைத்தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
- இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைதள பலகை (Portal) உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஒருங்கிணைக்கும்.
- மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.