தாலாட்டு பாட்டு

கண்மணியே கண்ணுறங்கு தாலாட்டு

தாலாட்டு பாட்டு

  • வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தாலாட்டு
  • தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.
  • நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர்பெற்றது.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

பாடல்

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் பார் போற்ற வந்தாயோ!

தந்தத்திலே தொட்டில் கட்டித் தங்கத்திலே பூ இழைத்துச்

செல்லமாய் வந்து உதித்த சேர நாட்டு முத்தேனோ!

வாழை இலை பரப்பி வந்தாரைக் கை அமர்த்திச் சுவையான விருந்து வைக்கும் சோழநாட்டு முக்கனியோ!

குளிக்கக் குளம் வெட்டிக் குலம் வாழ அணை கட்டிப் பசியைப் போக்க வந்த பாண்டிநாட்டு முத்தமிழோ!

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு!

பாடலின் பொருள்

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ!

தங்கப்பூ தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேர நாட்டின் முத்தேனோ!

இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை

உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ!

குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ!

கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

சொல்லும் பொருளும்

  • நந்தவனம் – பூஞ்சோலை
  • பண் – இசை
  • பார் – உலகம்
  • இழைத்து – பதித்து

 தொகைச்சொற்களின் விளக்கம்

  • முத்தேன் – கொசுத் தேன், மலைத் தேன், கொம்புத் தேன்
  • முக்கனி – மா, பலா, வாழை
  • முத்தமிழ் – இயல், இசை, நாடகம்

குறிப்பு : தால் + ஆட்டு – தாலாட்டு

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!