ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிகாரச் சமநிலை பேணப்பட வேண்டும்
- நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கான எட்டு நபர் குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
- 2024இல் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், மத்திய பாஜக அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- 1967 வரை இந்திய மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுவந்தது.
- மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
- இந்நிலையில், இப்படி ஒரு முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.
- குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட ஏழு பேர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆதிர் ரஞ்சன் செளத்ரி இந்தக் குழுவின் உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.
யோசனைகளை வழங்குவது
- அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் அந்தச் சட்டத்தின் விதிகளிலும் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பது, தொங்கு அவை அமையும்போதும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம், உறுப்பினர்களின் கட்சித்தாவல் ஆகியவற்றால் அரசு கலைக்கப்படும்போதும் எப்படித் தேர்தல் நடத்துவது என்பதற்கான யோசனைகளை வழங்குவது ஆகிய பொறுப்புகள் இந்தக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஆதரவு
- தேர்தலுக்கு ஆகும் செலவு குறையும்; ஆளும் கட்சிகள் தேர்தல்களில் கவனம் செலுத்துவது குறைந்து, ஆட்சியிலும் நலத் திட்டங்களிலும் கவனம் செலுத்த முடியும் என்பன போன்ற வாதங்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன.
- இந்த வாதங்களில் நியாயம் இருந்தாலும், இதுவரை இதற்கான உறுதியான சான்றுகள் இல்லை. உண்மையில், தேர்தல் நடத்துவதை வெறும் செலவுப் பிரச்சினையாகச் சுருக்கிவிட முடியாது.
இந்தியக் கூட்டாட்சி
- ஒரே நேரத்தில், தேர்தல்கள் நடத்தப்படும்போது சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம் புறக்கணிக்கத்தக்கது அல்ல.
- மேலும், இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என மூன்று அடுக்கு அரசாட்சி அமைப்பு நிலவுகிறது.
- ஒரே நேரத்தில் இவை அனைத்துக்கும் தேர்தல் நடத்துவது இந்த அடுக்குகளுக்கு இடையிலான சமநிலையைப் பாதிக்கக்கூடும். அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இசைவானதாக சட்டமன்றங்களின் ஆயுள்காலம் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்குமா என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதிலும் நியாயம் இருக்கிறது.
- மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது எதிர்க்கட்சிகள், மாநிலக் கட்சிகளின் கருத்துகளை எந்த விதமான மனச்சாய்வும் இன்றிப் பரிசீலித்துத் தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
- இந்தியாவின் அதிகாரச் சமநிலையும் கூட்டாட்சி அமைப்பும் பேணப்படுவது அவசியம் என்பதை மனதில்கொண்டு இக்குழு செயல்பட வேண்டும்.