Contents show
பெரியார்
- இந்தியாவைப் பீடித்துள்ள ஐந்து நோய்களுள் ஒன்றாக அரசியல் கட்சிகளை அடையாளப்படுத்தியதோடு, இறுதிவரை தமது இயக்கம் தேர்தல் அரசியலில்பங்கேற்காது என்றும் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தியவர் பெரியார்.
- இம்மண்ணில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த விரும்பியிருந்தால், அவரேஓர் அரசியல் கட்சியை நடத்தவும் தயங்கியிருக்கமாட்டார்.
- தானாகத் தம்மிடம் வந்துசேர்ந்த நீதிக்கட்சியைக் கூடத் தேர்தலில் பங்கேற்காததிராவிடர் கழகமாக மாற்றிய பெருந்தகையாளர் பெரியார். இருப்பினும், அரசியல் கட்சிகளின்பல்வேறு தவறுகளுக்காக இன்றைக்குப்பெரியாரே விமர்சனத்துக்கு ஆளாக்கப்படுகிறார் என்பதுதான் முரண்நகை.
சாதி உணர்விலிருந்து விடுதலை பெற
- சமூக மாற்றத்துக்கும் புரட்சிகரச் செயல்பாடுகளுக்கும் முற்போக்கு நடவடிக்கைகளுக்கும் ஆட்சி அதிகார மாற்றத்துக்கும் உலகமே தேர்தல் அரசியலைக் கைக்கொள்ளும்போது, அதில் பங்கேற்பதையே முற்றாகத் தவிர்த்த பெரியாரின் நோக்கம்தான் என்ன? இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் பிறவி இழிவாகத் திணிக்கப்பட்டிருக்கும் சாதியச் சமூக அமைப்பை அகராதியிலேயே இல்லாமல் செய்திட வேண்டும் என்பதையே முதன்மை லட்சியமாகக் கொண்டிருந்தார் பெரியார்.
- தம்முடைய லட்சியத்துக்குத் தடையாக இருந்த கடவுள், மதம், மொழி, தேசியம், குடும்பம், நம்பிக்கை, தீண்டாமை,கலை, இலக்கியம், புராணம், அரசியல் என அனைத்தையும் கடுமையாக எதிர்த்து விமர்சித்தஅவர், தம்முடைய லட்சிய நோக்கத்துக்கு ஆதரவானபகுத்தறிவு, தர்க்கம், ஒழுக்கம், அறம், ஆங்கிலம், சுயமரியாதைமிக்க சமத்துவக் கோட்பாடு, திருக்குறள்,வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், சமூக இயக்கம் என அனைத்தையும் தமதாக்கி, இறுகப் பற்றிக்கொண்டார்.
சாதி
- அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல, சாதி ஒருவருடைய பிறப்பின் அடிப்படையில் – ஏறுவரிசையில் மதிப்பையும் இறங்குவரிசையில் அவமதிப்பையும் அளிப்பதாக – ஒவ்வொரு நிலையிலும் மக்களைப் பிரித்தாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சாதி உணர்வில் மண்டிக்கிடக்கும் தமிழ்ச் சமூகம் அதிலிருந்து மீண்டெழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெரியார் கடுஞ்சினத்துடன் சாடுகிறார்: “நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்; நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்; நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்; நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி. இதை உயர்ந்த மொழி என்கிறார்கள். என்ன வெங்காய மொழி! 2000 வருடங்களாக இருக்கும் தமிழ் மொழி, சாதியை ஒழிக்க என்ன செய்தது?”
பெரியாரின் பிரகடனம்:
- அனைத்தையும் அரசியலாக மட்டுமே புரிந்துகொண்ட தமிழ்ச் சமூகம், பெரியார் மறைந்து 50 ஆண்டுகளாகியும் சாதி உளவியலிலிருந்து மீளாமல் ஆண்ட பரம்பரைப் பெருமை பேசி, ஆணவப் படுகொலைகளை நடத்தும் அளவுக்குத் துணிந்திருக்கிறது.
- தமிழ்ச் சமூகத்துக்குப் பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், தீரன் சின்னமலை, மருது பாண்டியர், கட்டபொம்மன், அழகு முத்துக்கோன், காமராசர் போன்றோருக்கெல்லாம் சிலை வைத்து தமிழ்ப் பெருமை பேசும் அதேவேளை, அவர்களைத் தத்தம் சாதிக்குரியவராகப் போற்றும் முரணான மனநிலை இங்கு ஒரு சமூகக் குற்றமாகக் கருதப்படவில்லை.
- சாதிக்கு ஆதாரமான கடவுள், மதம், புராணம், இதிகாசம், நம்பிக்கை, ஆன்மிகம் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வளர்த்தெடுக்கப்படும் மொழியுணர்வு, சாதி உணர்வைப் பொசுக்கிவிடும் எனப் பெரியார் நம்பவில்லை.
- தமிழனின் ஆழ்மனதில் தைக்கப்பட்டிருக்கும் மதத்தின் அடிப்படையிலான சாதியச் சிந்தனை அறுத்தெறியப்படும்போதுதான், அது சாத்தியமாகும் என அவர் உறுதியாக எண்ணினார்.
- அதனால்தான் சாதிக்கு ஆதாரமான மதத்துக்குத் துணைபோகும் அனைத்து வகையான சடங்கு, சம்பிரதாயம், பக்தி, கற்பு, பழக்கவழக்கம் என எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கினார்.
இடஒதுக்கீடு குறித்த புரிதலின்மை:
- பெரியாரின் உயிர்மூச்சுக் கொள்கையான சாதி ஒழிப்பு, பாலினச் சமத்துவம், பகுத்தறிவு, ‘ஆதிதிராவிடர்’களைத் ‘திராவிடர்’களாக்கும் செயல்திட்டம், தமிழை மத நீக்கம் செய்து அறிவியல் மொழியாக்குவதற்கான திட்டவரைவுகளுக்கு எல்லாம் முன்னுரிமை அளிக்காத தமிழ்ச் சமூகம், அவருடைய அரசியல்வயப்பட்ட தனித் தமிழ்நாடு கோரிக்கை, இந்தி எதிர்ப்பு மற்றும் மாநிலத் தன்னாட்சிக்கு அடுத்ததாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை மட்டுமே கவனப்படுத்தியுள்ளது.
- ஆனால், பெரியாருக்குப் பிறகு அதுவும் பிரதிநிதித்துவக் கோட்பாட்டின் உள்ளார்ந்த உரிமையாக வளர்த்தெடுக்கப்படாததால் – சாதிப் படிநிலையால் ஏற்பட்ட – பிற்படுத்தப்பட்ட நிலைக்கான நிவாரணம் என்றளவில் அது இடஒதுக்கீடாகச் சுருக்கப்பட்டுவிட்டது.
- அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற சுதந்திர நாட்டில், அதே வேறுபாடுகள் நிலவக் கூடாது என எண்ணுகிறோம்.
- ஆனால், இடஒதுக்கீட்டை அனுபவிக்கும் சமூகத்திலும் சாதியப் பாகுபாடுகள் குறையாமல் அதிகரிக்கும் எனில், அது பெரியார் காணத் துடித்த ஜனநாயகச் சமூகத்துக்கு எதிரானது.
பொறுப்புணர்வு
- முக்கால் நூற்றாண்டாக இடஒதுக்கீட்டை அனுபவித்த சமூகம் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டிருந்தால், அது நீதித்துறைக்கும்தனியார் துறைக்கும் விரிவடைந்து, அடுத்தடுத்த தலைமுறையும் முழுமையாக அனுபவிக்கும் நிலையைப் பெற்றிருக்கும்.
- ஆனால், பெரியார் பெற்றுத் தந்த வகுப்புவாரிப்பிரதிநிதித்துவக் கோட்பாடு ஒரு நூற்றாண்டை நெருங்குவதற்குள் – சமூக நீதிக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிராக – பொருளாதார அடிப்படையிலானதாக மாற்றப்பட்டுவிட்டது.
- மதத்தையும் அதனால் விளைந்த ஆதிக்கத்தையும் பெரியார் கடுமையாக விமர்சித்துப் பெற்றுத்தந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும்;
- ஆனால், மதத்தையும் அதன்வழி நிலைப்படுத்தப்படும் ஆதிக்கத்தையும் கைவிட மாட்டோம் என்பதால் விளைந்த அவலநிலையே இது.
- இதை உணராததால்தான் நாம் எஞ்சியிருக்கும் இடஒதுக்கீட்டையாவது அனுபவித்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதோடு – ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கும் அதைப் பகிர்ந்தளிப்பவர்களாக – வரலாற்றில் முரண்பட்ட கையறு நிலையில் இன்று நிற்கிறோம்.
தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள்
- தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரிப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், சாதிய ஆதரவாளர்கள் எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்களோ அதே கருத்தையேஇடஒதுக்கீட்டுப் பயனாளிகளான பிற்படுத்தப்பட்டோரும் / ஒடுக்கப்பட்டோரும் கொண்டிருக்கிறார்களோ என ஐயமுற வேண்டியுள்ளது.
- உண்மையில் சாதிக்காகக் கொடுக்கப்படுவது அல்ல இடஒதுக்கீடு; சாதியால் விளைந்த பிற்படுத்தப்பட்ட நிலையைச் சீர்ப்படுத்தவே அது அரசால் வழங்கப்படுகிறது.
- அதனால் சாதி எந்த நிலையிலும் நிலைபெற்று உண்மை என்றாகிவிடாது. இந்த உண்மை புரிந்துகொள்ளப்படாததால், இடஒதுக்கீட்டுப் பயனாளிகளிடையே ஓர்மை ஏற்படுவதற்கு மாறாக, அது சாதிப் பகையுணர்வாக வலுப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது.
சமூக ஓர்மையின் தேவை:
- இப்பேராபத்தை உணர்ந்ததால்தான் பெரியார், “சமுதாயத்தில் ஒவ்வொரு சாதிக்காரனும் தமக்குள்ள சாதி இழிதன்மை பற்றிச் சிந்திக்காமல், ஒழிக்கப் பரிகாரம் காணாமல், அவனவன் தாங்கள் மற்றவனைவிட உயர்ந்த சாதி, மேலான சாதி என்று கூறிக்கொள்ள முற்படுகின்றானே ஒழிய, சாதி இழிவை ஒழிக்க, சாதி முறையை ஒழிக்க எண்ண மாட்டேன் என்கிறார்களே!” என்றார்.
- தவிர, எந்தத் தனிப்பட்ட வகுப்பினரும் தங்கள் அளவில் சாதியிலிருந்து விடுதலை பெற்றுவிட முடியாது என்பதால்தான் இவ்வமைப்பால் பாதிப்புக்குள்ளான பெரும்பான்மை மக்கள், ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தையும் பெரியார் வலியுறுத்தினார்.
- பெரியார் ஊட்டிய சுயமரியாதை, பகுத்தறிவு, திராவிட – தமிழுணர்வு அரசியல் அதிகாரத்துக்கானதன்று; அது தமிழ்ச் சமூகத்தைப் பண்படுத்தி, அவர்களை மானமும் அறிவும் உள்ள மக்களாக்குவதே.
- ‘தமிழன்’ என்கிற அரசியல் ஓர்மை, ஒரு சமூக ஓர்மையாகப் பரிணமிப்பதன் மூலம் சாதி ஒழிந்தாக வேண்டும் என்பதே அவருடைய ஒப்பற்ற லட்சியம். அதற்காகத்தான் பெரியார் தம் வாழ்நாள் முழுவதும், ஏன் தமது மரணப்படுக்கையில்கூட, இம்மக்களின் பிறவி இழிவைப் போக்க முடியவில்லை என்பதற்கே பெரிதும் ஆதங்கப்பட்டார்.
- பிறவி இழிவை ஒழிப்பதென்பது சாதிப் பட்டத்தைத் துறப்பதுடன் முடிவதில்லை.
- அது, இச்சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்புவது. அதற்கு முன்னெப்போதையும்விடத் தற்போது பெரியார் தேவைப்படுகிறார்.
டிசம்பர் 24: தந்தை பெரியாரின் 50ஆம் நினைவுநாள்