செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்ப வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து அத்தொழிநூட்ப கட்டுப்பாடுளின்தேவை குறித்து விவாதிக்க 

ஏஐ நுட்பத்தை எப்படி எதிர்கொண்டது உலகம்?

  • செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்னும் நவீனத் துறை, 1956இல் அதிகாரபூர்வமாக அறிமுகமான பத்தாண்டுகளுக்குப் பிறகு, ‘எலிசா’ அரட்டைப்பெட்டி (Chatbot) மூலம் முதல் முக்கியப் பாய்ச்சல் நிகழ்ந்தது. 
  • எலிசா அறிமுகமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இப்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது. 
  • வரலாற்று நோக்கில், செயற்கை நுண்ணறிவு இன்னும் வளர வேண்டியிருக்கிறது. 
  • இருப்பினும் அதன் இப்போதைய வளர்ச்சியே மனிதகுலத்தை நடுங்கச் செய்யும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 2023ஆம் ஆண்டு நமக்கு அளிக்கும் சிறப்புச் செய்தி இதுதான்!

எங்கும் ஏஐ! 

  • 2023இல், எல்லாத் துறைகளிலும் ஏஐ-யின் தடங்கள் அழுத்தந்திருத்தமாகப் பதிந்திருப்பதை உணரலாம். ஏஐ நுட்பம் வெகுஜனமயமாகி இருப்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. 
  • பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்தாலும், வெகுமக்களைப் பொறுத்தவரை இந்நுட்பம் கைக்கு எட்டாத தொழில்நுட்ப மாயாஜாலமாகவே கருதப்பட்டது. 
  • அதோடு, ஏஐ பற்றிப் பேசும்போதெல்லாம் அதன் ஆற்றலைவிட, போதாமைகளே அதிகம் பேசப்பட்டுவந்தன.

எலிசா வழி! 

  • எலிசாவின் வழித்தோன்றலான ஒரு ஒற்றைச் சேவை இந்த நிலையை மாற்றியிருக்கிறது. 
  • ஏஐ அரட்டைப்பெட்டியான ‘சாட்ஜிபிடி’தான் அது. 2022ஆம் ஆண்டு இறுதியில், ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தியது என்றாலும், அது வேகமாக வளர்ச்சி பெற்றது 2023இல்தான். அத்துடன், செயலி வடிவில் அறிமுகமாகி உள்ளங்கைக்கும் வந்துசேர்ந்தது. 
  • சாட்ஜிபிடி அதன் வளர்ச்சியில் எண்ணற்ற பாய்ச்சல்களைக் கண்டது என்றால், அதன் தாக்கத்தால் போட்டி நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு ஏஐ அரட்டைப்பெட்டிச் சேவைகளை அறிமுகப்படுத்தின. 
  • கூகுள், ‘பார்ட்’ (Bard) அரட்டைப்பெட்டியை அறிமுகப்படுத்தியது. மேம்பட்ட வடிவமான ‘ஜெமினி’யை (Gemini) அண்மையில் அறிமுகம் செய்தது. கேள்வி-பதில் தளமான ‘கோரா’ (Quora), ‘போ’ சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது. 
  • ஓபன் ஏஐ-யின் முன்னாள் ஊழியர்களால் தொடங்கப்பட்ட ‘ஆந்த்ரோபிக்’, ‘கிளாட்’ என்னும் அரட்டைப்பெட்டியை அறிமுகப்படுத்தியது. தனியுரிமை தேடு இயந்திரமான ‘டக்டக்கோ’, ‘டக் அசிஸ்ட்’ எனும் பெயரில் ஏஐ சேவையைக் கொண்டுவந்தது.

கூகுள் சாட்பாட்: 

  • மைக்ரோசாப்ட் சாட்ஜிபிடியைத் தனது ‘பிங்’ தேடு இயந்திரத்தில் ஒருங்கிணைத்ததோடு, ‘ஆபிஸ்’ மென்பொருள்கள் அனைத்திலும் ஏஐ வசதியைத் தீவிரமாக்கியது. 
  • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இன்ஸ்டகிராம், வாட்ஸ்ஆப், மெஸெஞ்சர் எனத் தனது எல்லா மேடைகளிலும் ஏஐ நுட்பத்தைக் கொண்டுவந்தது. 
  • கூகுளின் யூடியூபும் தன் பங்குக்கு, வீடியோ உருவாக்க ஏஐ வசதியை அளித்தது. அடோப், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் பின்தங்கிவிடவில்லை. 
  • இன்னொரு பக்கம் சாட்ஜிபிடிக்குக் கிடைக்கும் வரவேற்பினால் ஊக்கம் பெற்ற பிற வர்த்தக நிறுவனங்களும் ஏஐ நுட்பத்தை ஆர்வத்தோடு தழுவிக்கொண்டன. 
  • பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ நுட்பத்தை நோக்கிப் படையெடுத்த நிலையில், விடியா (Nvidia) எனும் நிறுவனம் கவனத்தை ஈர்த்தது. 
  • ‘ஆப்பிள், அமேசான், கூகுளை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், அடுத்த பெரிய நிறுவனம் இதுதான்!’ என்றும் பேச வைத்தது. விடியாவின் இந்த வீச்சுக்குக் காரணம் ஏஐ ஆற்றல் கொண்ட சிப்களை அது தயாரிப்பதுதான்.

ஏஐ சிப்: 

  • பல நிறுவனங்கள் ஏஐ நுட்பத்தை நாடிவரும் நிலையில், இந்தத் தேவைக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்க வேண்டும் எனில், ஏஐ செயல்பாடுகளைத் தாங்கக்கூடிய ஆற்றல் சிப்களுக்கு இருக்க வேண்டும். 
  • இந்தப் பிரிவில் ஏற்கெனவே விடியா முன்னிலையில் இருப்பதால், ஏஐ ஆதிக்கத்தில் அதன் பிரகாசம் இன்னும் அதிகரித்துள்ளது. 
  • போட்டி நிறுவனமான இண்டெலும் இந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முயல்கிறது. 
  • ஓபன் ஏஐ நிறுவனமும் தன் பங்குக்குச் சொந்த ஏஐ சிப் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக இடையே பரபரப்பாகப் பேசப்பட்டதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நவம்பர் மாதம் சற்றும் எதிர்பாராத வகையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்ட புதிரின் பின்னணியில், இந்தத் திட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
  • ஆல்ட்மேன் நீக்கப்பட்ட வேகத்தில் அவர் மீண்டும் நிறுவனத்துக்கு அழைக்கப்பட்டார். அது ஏஐ உலகில் அவரது முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் உணர்த்தியது.

தேவை கட்டுப்பாடு: 

  • உலக நாடுகளின் கவலையோ ஏஐ நுட்பத்தின் செல்வாக்கு பற்றியதாக இருந்தது. ஏஐ நுட்பத்தால் ஏற்படக்கூடிய எதிர்கால ஆபத்தைக் கருத்தில் கொண்டு, சட்டரீதியான கட்டுப்பாடு தேவை எனும் விவாதம் தீவிரமானது. 
  • அதிலும் குறிப்பாக, ஏஐ நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடும் சட்டங்கள் தேவை என்னும் கருத்து வலுப்பெற்றது. ஏஐ தொடர்பான சட்டம் இயற்றுவதில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னணியில் நிற்க, இன்னொருபுறம் ஏஐ பாதுகாப்புக்கான புதிய தர நிர்ணயங்களை உருவாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருக்கிறார். 
  • பிரிட்டன் ஏஐ பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது. ஏஐ நுட்பம் கொண்டு பொய்யான ஆபாசக் காணொளிகளை உருவாக்கி, பிரபலங்களைப் பதறவைக்கப் பயன்படும் டீப்ஃபேக் (Deepfake) போன்ற நுட்பங்கள் அரசுகளின் கவலையை இன்னும் அதிகமாக்கியுள்ளன.

மானுடம் வெல்லும்! 

  • ஏஐ அலைக்கு மத்தியில், வெகுமக்களின் கவலை வேறுவிதமாக அமைந்திருந்தது. சாட்ஜிபிடி போன்ற அரட்டைப்பெட்டிகளும், ஏஐ சேவைகளும்தான் எதிர்காலம் என்றால், வேலைவாய்ப்பு என்னவாகும் என்னும் கேள்வி உலுக்கி எடுத்துவருகிறது. 
  • சாட்ஜிபிடி கதை, கவிதை எழுதும் என்றால், படைப்பூக்கம் இனி என்னவாகும் என்னும் கேள்வியும் அலைக்கழிக்கிறது. 
  • இதனிடையே சாட்ஜிபிடி போன்ற ஏஐ மென்பொருள்கள் உண்மையான அறிவுத்திறன் அல்ல என வாதிடும் நோம் சாம்ஸ்கி, எமிலி பெண்டர் உள்ளிட்ட அறிவுஜீவிகளின் குரல் ஆறுதல் அளிக்கிறது. 
  • கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னும் எண்ணற்ற ஏஐ போக்குகள் இருந்தாலும், சாட்ஜிபிடி பிரபலமாக்கியிருக்கும் புதிய பொறியியல் பற்றிய குறிப்புடன் இந்த அலசலை நிறைவு செய்யலாம்.

கட்டளைப் பொறியியல்

  • கட்டளைப் பொறியியல் என்று புரிந்துகொள்ளக்கூடிய ‘பிராம்ப்ட் இன்ஜினியரிங்’ (Prompt engineering) தான் அது. 
  • சாட்ஜிபிடி போன்ற சேவைகளிடம் இருந்து எதிர்பார்த்த பலனைப் பெற வேண்டும் என்றால், அவற்றுக்கான ஆணைகள் மிகச் சரியாக, குழப்பம் இல்லாமல் அளிக்கப்பட வேண்டும் என்கின்றனர். 
  • இந்தத் திறனே பிராம்ப்ட் இன்ஜினியரிங் ஆகிறது. ஆக, நாம் சரியாக இயக்கவில்லை எனில், சாட்பாட்கள் கோட்டைவிடும். ஏஐ சாட்பாட்கள் உண்டாக்கியிருக்கும் படைப்பூக்கத் திறன் விவாதத்துக்கு மத்தியில், ஏஐ நுட்பங்களை இயக்கும் சாவி இன்னமும் மனிதர்கள் கைகளில் இருக்கிறது என்பதற்கான அடையாளமாகவும் இது அமைகிறது. 2023 சொல்லும் இன்னொரு முக்கியச் செய்தி இது!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!