இந்தியாவில் போக்சோ வழக்குகள் நிலை பற்றி விவாதித்து அரசின் கடமைகளை வரிசைப்படுத்துக  

அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்: 

  • இந்தியாவில் 2023 ஜனவரி நிலவரப்படி 2.43 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் வெளியிட்டிருக்கும் அறிக்கை, குழந்தைகளின் நலன் மீது ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறையின்மையை வெட்டவெளிச்சமாக்குகிறது. 
  • குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் 2019இல் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் சிறார் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. 
  • ஒரு மாவட்டத்தில் 100 வழக்குகளுக்கு மேல் இருந்தால், ஒரு போக்சோ நீதிமன்றத்தையும் 300 வழக்குகளுக்கு மேல் இருந்தால் இரண்டு போக்சோ நீதிமன்றங்களையும் அமைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  • ஆனால், மாநில அரசுகள் சிறப்பு நீதிமன்றங்களைப் போதிய அளவு அமைக்கவில்லை.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவு 

  • 30 மாநிலங்களில் 761 விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் 414 போக்சோ நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டதாகவும் அவற்றில் 2023 நவம்பர் வரை 1,95,000 வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கான மத்திய அரசின் நிதிநல்கையை 2026 வரை நீட்டிக்கும் மத்திய அரசின் அறிவிக்கை தெரிவிக்கிறது. 
  • ஆனால், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவோ 2,68,038 போக்சோ வழக்குகளில் 8,909 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்கிறது. 
  • இதன்படி பார்த்தால், ஒவ்வொரு போக்சோ நீதிமன்றமும் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 28 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 
  • இந்நிலை தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு நீதி கிடைக்க, குறைந்தது 30 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும்.

நிர்பயா நிதி

  • போக்சோ நீதிமன்றங்களுக்கு நிர்பயா நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும் பல மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. 
  • தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாத மாவட்டங்களில் போக்சோ வழக்குகள் மகிளா நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகின்றன. 
  • 2023 ஏப்ரல் நிலவரப்படி மதுரையில் 874, சென்னையில் 688 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
  • இந்திய அளவில் ஒப்பிடுகையில் இவை குறைவுதான் என்கிறபோதும் சிறார் மீதான பாலியல் குற்றவழக்குகளைப் பிற வழக்குகளைப் போல நடத்துவது குழந்தைகளின்உரிமைகளுக்கு எதிரானது.

சமூகப் புறக்கணிப்பு

  • இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் புகாராகப் பதிவுசெய்யப்படுவதே குறைவு என்கிற நிலையில், வழக்குக்காக வெளியூருக்குச் செல்ல வேண்டியிருப்பது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தும். 
  • தீர்ப்பு கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் குழந்தைகளின் மன அமைதியைக் குலைப்பதோடு, பெற்றோரிடம் சட்டம் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்.
  • வழக்குக்காக நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதால் குழந்தையின் கல்வி, பெற்றோரின் வேலை போன்றவை பாதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட குடும்பம் சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாகக்கூடும்.

அரசமைப்புச் சட்டத்தின் கடமை 

  • அனைத்துக் குழந்தைகளுக்கும் நீதி என்பதுதான் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை. குழந்தைகளின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற நோக்கில்தான் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களை நிகழ்த்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனைவரை அளிக்கும் வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டத் திருத்தம் (2018) நடைமுறைப்படுத்தப்பட்டது. 
  • எனினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சட்டங்கள் ஏட்டளவில் இருந்தால் மட்டும்போதாது, அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் குழந்தைகளின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!