இனியும் தொடர வேண்டுமா மரண தண்டனை?
- மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தை ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற நிலைக் குழு, புதிய சட்டத்தில் மரண தண்டனை சேர்க்கப்பட வேண்டுமா, கூடாதா என்பதை மத்திய அரசின் முடிவுக்கே விட்டுவிடுவதாக அறிவித்துள்ளது.
- இது மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா என்னும் புதிய சட்டத்துக்கான மசோதா, உள்துறை விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு விடப்பட்டுள்ளது.
- பல்வேறு நிபுணர்களும் சட்ட வல்லுநர்களும் புதிய சட்டத்தில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் விரிவான வாதங்களையும் இந்தக் குழுவிடம் முன்வைத்துள்ளனர்.
பரிந்துரைக்க மறுப்பு
- நிலைக்குழுவில் உள்ள ப.சிதம்பரம், திக்விஜய் சிங், டெரிக் ஓ பிரையன் ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மரண தண்டனைக்கு எதிரான வாதங்களை முன்வைத்துள்ளனர். ஆனால், நிலைக் குழு, மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்க மறுத்துவிட்டது.
- நீதியின் பார்வையில் எங்கேனும் தவறு நிகழும்பட்சத்தில் குற்றம் இழைக்காதவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும் ஆபத்து இருப்பதை நிலைக் குழு அங்கீகரித்துள்ளது. மரண தண்டனை நீக்கப்படுவதற்கு வேறு சில வலுவான வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
- மரண தண்டனையால் குற்றங்கள் தடுக்கப்படுவதற்கோ மரண தண்டனை நீக்கப்பட்டுவிட்ட நாடுகளில் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பதால், உலக அளவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பதற்கான மனநிலை வலுப்பெற்று வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம்
- அரிதினும் அரிதான குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் மரண தண்டனை கூடுமானவரை தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்ப்புகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
- 2022இல் ‘மனோஜ் எதிர் மத்தியப் பிரதேச அரசு’ வழக்கில் விசாரணை நீதிமன்றங்கள், ஒவ்வொரு வழக்கிலும் மரண தண்டனை தவிர்ப்புக்கான சூழ்நிலைகளைப் பரிசீலிப்பதற்கான நடைமுறைசார்ந்த வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிக்கை
- ஆனால், 2022இல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 165 மரண தண்டனைகளை விசாரணை நீதிமன்றங்கள் வழங்கியிருப்பதாக டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் கவனத்துக்குரியது. நீதித் துறைக்குள் நிலவும் இத்தகைய முரண்கள் களையப் பட வேண்டியது அவசியம்.
- மரண தண்டனைக்குப் பதிலாக வலுவான சிறைத் தண்டனையை உறுதிப்படுத்துவது குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகள் திருந்துவதற்கும் துணைபுரியும் என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது.
- ஆனால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிலர், அரசுகளின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தின் மூலம் சில ஆண்டுகளிலேயே சிறையிலிருந்து வெளியேறிவிடுவதும் இதில் நிலவும் அரசியல் கணக்கீடுகளும் மரண தண்டனைக்கு ஆதரவான மனநிலைக்கு வலுவூட்டுகிறது.
மனிதநேய விழுமியங்கள்
- பாரதிய நியாய சன்ஹிதாவில் ஆயுள் தண்டனை என்பது குற்றவாளியின் எஞ்சிய வாழ்நாள் முழுமைக்குமான சிறைத் தண்டனை என்று வரையறுக்கப்பட்டுள்ளது, இந்தப் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது.
- மரண தண்டனை தொடர வேண்டுமா கூடாதா என்பது குறித்த முடிவை எடுக்கும்போது, குற்றங்களைத் தடுப்பதோடு மனிதநேய விழுமியங்களையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
- நீண்ட கால நோக்கில் மரண தண்டனை தேவைப்படாத சமூகத்தை உருவாக்குவதற்கு அரசும் நீதித் துறையும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.