இஸ்ரோவின் சமீபத்திய திட்டங்களை பற்றி விவரித்து எழுதுக

  • சூரியனில் கால் பதிக்க வேண்டும் என்கிற கனவுடன் செயல்படுகிறது நமது விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ. கனவு காண்பது மட்டுமல்லாமல், அந்தக் கனவை நனவாக்கும் தொழில்நுட்ப மேதைமையும், கடினமான உழைப்பும், மன உறுதியும் அந்த நிறுவனத்தின் எல்லா விஞ்ஞானிகளுக்கும் உண்டு. 
  • அதைத் தெரிந்து வைத்திருப்பதால்தான், 2035-இல் இந்தியா விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்கும் என்றும், 2040-இல் நிலவில் கால் பதிக்க ஓா் இந்தியரை அனுப்பும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறாா்.

‘சந்திரயான் 3’

  • இந்தியா அனுப்பிய ‘சந்திரயான் 3’ விண்கலம், நிலவில் வெற்றிகரமாக இறங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. 
  • சந்திரனில் வெற்றிகரமாக விண்கலத்தை இறங்கச் செய்த நான்காவது உலக நாடு என்கிற பெருமையை இந்தியா அடைந்திருக்கிறது. 
  • அதிலும் நிலவின் தென்துருவத்தில் முதல் முதலில் தடம் பதித்த நாடு என்கிற சாதனையையும் நாம் படைத்திருக்கிறோம்.

‘ககன்யான்

  • இப்போது விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் அடுத்தகட்ட முயற்சியில் இறங்கி இருக்கிறது ‘இஸ்ரோ நிறுவனம். கடந்த வாரம் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆளில்லா சோதனை விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 17 கி.மீ. 
  • உயரம் வரை ஏவப்பட்ட ராக்கெட்டிலிருந்து பிரிந்த மாதிரி கலன், வங்கக் கடலில் பாராசூட் மூலம் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. அதை கடற்படையினா் மீட்டனா்.
  • தரையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ்வட்ட பாதைக்கு விண்கலன் மூலம் வீரா்களை அனுப்பி, அவா்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் முயற்சிதான் ‘ககன்யான் திட்டம். 
  • 2025-ஆம் ஆண்டிலோ, அதற்கு முன்பாகவோ செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘ககன்யான் பயணத்துக்கு முன்னதாக மூன்று கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 
  • அதன் முதற்கட்ட சோதனைதான் சனிக்கிழமை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • மனிதா்களுடன் விண்வெளியில் செலுத்தப்படும் விண்கலம், ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதி வழியில் தோல்வியடைந்தால், அதில் பயணிக்கும் வீரா்களை பாதுகாப்பாக பூமிக்கு திருப்பிக் அழைத்து வருவதற்கான முயற்சிதான் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. ‘டெஸ்ட் வெஹிக்கிள் அபாா்ட் மிஷன் (டி.வி.-டி.1) என்று இந்த முயற்சி அழைக்கப்பட்டது. 
  • இதுபோல மேலும் சில முயற்சிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிறகுதான், ‘ககன்யான் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.
  • அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், விண்வெளி சோதனைகளை மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது, ராக்கெட்டுகளை சைக்கிள் மூலம் எடுத்துச் சென்ற காலம் போய், இப்போது நாம் உள்நாட்டில் உருவாக்கப்படும் ராக்கெட்டுகள் மூலம் நூற்றுக்கணக்கான விண்கலன்களைச் செலுத்தும் நிலைக்கு உயா்ந்திருக்கிறோம். 
  • சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலன்களை அனுப்பிய அனுபவங்கள் நமது விஞ்ஞானிகளின் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும், தொழில்நுட்பத் திறமையையும் அதிகரித்திருக்கின்றன.

‘ஆதித்யா – எல்1’

  • 1969 ஆகஸ்ட் 15-ஆம் தேதி உருவான ‘இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்து வந்திருக்கும் சோதனைகள் ஏராளம். 
  • அதேபோல சாதனைகளும் ஒன்றிரண்டல்ல. ‘ஆதித்யா – எல்1’ உள்பட தொடா்ந்து பல விண்வெளி சா(சோ)தனைகளை முன்னெடுத்து வருகிறது ‘இஸ்ரோ
  • வளா்ச்சி அடைந்த ஏனைய பல நாடுகள் மிகுந்த பொருள் செலவில் அடைந்து வரும் விண்வெளி ஆய்வு வெற்றிகளை, ‘இஸ்ரோ மிகக் குறைந்த செலவில் முடிந்த வரையில் உள்நாட்டிலேயே உதிரி பாகங்களை உருவாக்கி நடத்திக் காட்டுவதை உலகமே பாா்த்து வியந்து நிற்கிறது.
  • இந்திய விண்வெளி ஆய்வுகளில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்டுவது அவசியம்தானா என்கிற கேள்வியில் அா்த்தமில்லை. 
  • இந்த முயற்சிகள் நமது விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப மேன்மையை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல், விண்வெளி குறித்த பல புதிய வெளிச்சங்களையும் பாய்ச்சுகின்றன. 
  • சந்திரனில் இருக்கும் இயற்கை வளங்கள், தாதுப் பொருள்கள், நீராதாரம் போன்றவை வருங்காலத்தில் மிகப் பெரிய வா்த்தக வாய்ப்புகளை உருவாக்கினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
  • விண்வெளித் திட்டங்கள் வெறும் சோதனை முயற்சிகள் அல்ல. பொருளாதார ரீதியாக மிகப் பெரிய வாய்ப்புக்கும் காரணமாகின்றன. விண்கலன் தயாரிப்பு, விண்கலன் செலுத்துதல், விண்வெளிச் சுற்றுலா என்று பல வாய்ப்புகளுக்கு இந்த ஆராய்ச்சிகள் கதவைத் திறக்கின்றன. 
  • வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் பொருளாதார வளா்ச்சிக்கும் இவை உதவக்கூடும்.
  • உயா்ந்த இலக்குகளும், அா்ப்பணிப்புணா்வும், திறமையும் கொண்ட விஞ்ஞானிகள்தான் ‘இஸ்ரோ அமைப்பின் மிகப் பெரிய பலம். ஆனால், அதற்கேற்றவாறு அவா்களுக்கு ஊதியம் தரப்படுகிறதா என்று யாரும் கேட்பாரில்லை. 
  • கனிணித் தொழில்நுட்பத்தையும், வணிகவியலையும், மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளையும் நாடும் இளைஞா்கள், விண்வெளித் தொழில்நுட்பத்தால் அதே அளவில் ஈா்க்கப்படவில்லை. 
  • அதற்குக் காரணம், அதற்குத் தேவைப்படும் உழைப்பும், அந்த உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமையும்…
  • அரசுத் துறையாக, அரசு ஊழியா்களாக விஞ்ஞானிகளைக் கட்டிப்போடுவது, வருங்காலத்தில் ‘இஸ்ரோ முன்னெடுக்கும் கனவு முயற்சிகளுக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. சந்திரனில் இறங்கினால் மட்டும் போதாது, ‘இஸ்ரோ இளைஞா்களை ஈா்க்கும் விதத்தில் மாற வேண்டும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!