உயர்நீதிமன்றத்தின் அதிகாரவரம்புகள் யாவை?

அதிகாரவரம்பும் அதிகாரங்களும்

  • அரசியலமைப்பின்படி சென்னை உயர்நீதிமன்றம் பின்வருகின்ற அதிகார வரம்பையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளது.

ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பு

  • மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று மாநில நகரங்களும் தங்களுடைய மாநில நகரங்களில் உருவாகும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பைப் பெற்றிருந்தன.
  • இருப்பினும், 1973 ஆம் ஆண்டின் குற்ற வழிமுறைச் சட்டத்தால் உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு குற்ற அதிகார வரம்பு முழுவதும் எடுக்கப்பட்டது.
  • சிவில் வழக்குகளை நடத்துவதற்கு நகர சிவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு சிவில் அதிகாரவரம்பு ஒழிக்கப்படவில்லை.
  • அதாவது, வழக்கின் மதிப்பீடு உயர்வின் காரணமாக அது ஒழிக்கப்படவில்லை.

மேல் முறையீட்டு அதிகாரவரம்பு

  • தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் தலையாய நீதிமன்றமாக உள்ளது.
  • சிவில் மற்றும் குற்ற வழக்குகள் இரண்டிலும் மேல் முறையீட்டு அதிகாரவரம்பை அது பெற்றுள்ளது.
  • சிவில் பகுதியில், மாவட்ட நீதிபதியின் முடிவிலிருந்தும், உயர் மதிப்பீட்டின் காரணமாகத் துணை நீதிபதியின் முடிவிலிருந்தும் நேரடியாக மேல்முறையீடுகள் உயர்நீதிமன்றத்திற்கு வருகின்றன.

நீதிப்பேராணை அதிகாரவரம்பு

  • இந்திய அரசியலமைப்பு வடிவமைப்புக் குழுவின் தலைவரான பி.ஆர். அம்பேத்கரின் கருத்திற்கிணங்க, விதி-32 அரசியலமைப்பின் உயிரும் இதயமும் ஆகும்.
  • ஏனென்றால், நீதிப்பேராணைகள் மூலமாக ஒவ்வொரு இந்தியக் குடிமகளின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் சலுகைகள் போன்றவற்றை அது பாதுகாக்கிறது.
  • அதேபோல, விதி 226-ன் படி உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை அதிகார வரம்பைப் பெற்றுள்ளது.
  • ஆட்கொணர்பேராணை, கட்டளைப்பேராணை, தடுப்புப்பேராணை, சான்றுபேராணை மற்றும் தகுதிவினாப் பேராணை போன்ற ஐந்து பேராணைகள் உள்ளன.

கண்காணிக்கும் அதிகாரம்

  • உயர்நீதிமன்றம் இராணுவத் தீர்ப்பாயங்களைத்தவிர, தனது அதிகார வரம்பின் பரப்பிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் மற்றும் தீர்ப்பாயங்களையும் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. உண்மையில், அது பரந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

மாநில நீதித்துறையின் தலைமையகம்

  • மாநில நீதித்துறையின் தலைமையகமாக, உயர்நீதிமன்றம் தனது மேல்முறையீட்டு மற்றும் மேற்பார்வை அதிகார வரம்பைத்தவிர, சில குறிப்பிட்ட விவகாரங்களில் துணை நீதித்துறையின் மீது நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது.
  • இவ்வாறாக, உயர்நீதிமன்றம் அதிகாரம் பொதிந்ததாக உள்ளது. மேலும், அது பதிவு நீதிமன்றமாகவும் செயல்படுகிறது.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, மாநிலத்தின் மிகமுக்கியமான வழக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு அமர்வு அதிகாரவரம்பையும் அது பெற்றுள்ளது.

துணை நீதிமன்றங்கள்

  • சிவில் வழிமுறை சட்டத்துடன் தொடர்புள்ள சிவில் நீதிமன்றங்கள் மற்றும் குற்ற வழிமுறைச் சட்டத்துடன் தொடர்புள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் போன்ற இரண்டு வகைகளாகத் துணை நீதிமன்றங்கள் பிரிக்கப்படுகின்றன.
  • அகில இந்திய நீதிபதிகள் சங்கத்தின் வழக்கிற்கிணங்க, (1989) நாடு முழுவதும் துணை நீதித்துறையின் நீதி அலுவலர்களில் ஒரேமாதிரியான பதவிநிலை கொண்டுவர உச்சநீதிமன்றம் வலியுறுத்துகிறது.
  • அதாவது, சிவில் பக்கத்தில் மாவட்ட நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதி (முதுநிலைப் பிரிவு) மற்றும் சிவில் நீதிபதி (இளநிலைப் பிரிவு) என்ற படிநிலையும், குற்றவியல் வழிமுறைச் சட்டம் வரையறுத்தபடி குற்றவியல் பக்கத்தில் செசன்ஸ் நீதிபதி, கூடுதல் செசன்ஸ் நீதிபதி, முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் நீதித்துறை நடுவர் என்ற படிநிலையும் இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!