சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்

இந்திர விழா ஊரெடுத்த காதை -மருவூர்ப் பாக்கம்
  • வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை காட்சிப்படுத்துகின்ற மருவூரப் பாக்கம்

பாடல் – 13-39

  • வண்ணமும் சுண்ணமும் தண் நறுஞ் சாந்தமும்
  • பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்
  • பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் பட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்
  • *தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
  • அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
  • பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்

பாடலின் பொருள்

  • புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில், வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, , குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப்பு கைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
  • இங்குப் பட்டு, பருத்தி நூல், முடி இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் (சாலியர்) வாழும் வீதிகள் உள்ளன.
  • இங்குப் பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் உள்ளன
  • மேலும் இவ்வீதிகளில் வேறு பலப்பல பண்டங்களின் விற்பனை நடைபெறுகின்றது.
  • (எட்டு) 8 வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

சொல்லும் பொருளும்

  • சுண்ணம்  – நறுமணப்பொடி
  • தூசு – பட்டு
  • வெறுக்கை – செல்வம்
  • காருகர் – நெய்பவர் (சாலியர்)
  • துகிர் – பவளம்

பாடல்

காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர், மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர். பண்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்

கஞ்சக் காரரும் செம்பு செய்குநரும் மரக்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

மண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும் பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும்

தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கிப் பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்* *

சிறுகுறுங் கைவினைப் பிறர் வினையாளரொடு மறு இன்றி

விளங்கும் மருவூர்ப் பாக்கமும்

–   இந்திர விழா ஊரெடுத்த காதை

பாடலின் பொருள்

  • மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில், பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர்.
  • மேலும் வெண்மையான உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான (ஐந்து) 5 நறுமணப் பொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகரும் இங்கு வணிகம் செய்கின்றனர்.
  • இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன.
  • வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர்,மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர்.
  • பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல்பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்
  • இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன. 
  • குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் (ஏழு) 7 இசைகளைக் (ஸ,ரி,க,ம,ப,த,நி என்னும் (ஏழு) 7 சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன.
  • இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறுசிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன.
  • இவை அனைத்தும் குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து விளங்கப் பரந்து கிடந்தன.

சொல்லும் பொருளும்

  • நொடை  –  விலை
  • பாசவர்  –  வெற்றிலை விற்போர்
  • ஓசுநர்  – எண்ணெய் விற்போர்
  • மண்ணுள் வினைஞர்  – ஓவியர்
  • மண்ணீட்டாளர் – சிற்பி
  • கிழி – துணி

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!