திடக் கழிவு மேலாண்மை: தேவை முழுமையான பாதுகாப்பு!
- சென்னை மாநகரில், நாளொன்றுக்கு உற்பத்தியாகும் திடக் கழிவானது தற்போதைய அளவான 6,143 டன்களிலிருந்து 2040இல் 11,973 டன்களாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், திடக் கழிவு மேலாண்மைக்காக மூன்று புதிய திட்டங்களுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 31 அன்று ஒப்புதல் அளித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.
- தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள்தொகை தொடர்ச்சியாக உயர்ந்துவரும் நிலையில், நகரில் உற்பத்தியாகும் திடக் கழிவின் அளவும் அதிகரித்துவருகிறது.
கள நிலவரம்
- தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக் கிடங்கிலும் (225.16 ஏக்கர்), திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலும் (342.91 ஏக்கர்) சேகரிக்கப்பட்டுக் கையாளப்படுகின்றன.
- 2001 காலகட்டத்தில், நாளொன்றுக்குச் சுமார் 2,500 டன் திடக் கழிவுகள் உற்பத்தியாகின.
- இன்றைக்கு 6,143 டன்கள் என்கிற அளவை எட்டியிருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில், வெறும் 1,800 டன்கள் மட்டுமே மறுசுழற்சி உள்ளிட்ட குப்பைகளைக் கையாளும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டன.
- இந்நிலையில், உற்பத்தியாகும் குப்பையின் அளவும் மறுசுழற்சி உள்ளிட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படும் குப்பைகளின் அளவும் 2030இல் சமநிலையை எட்டும் எனவும், இதன் மூலம் குப்பைக் கிடங்குகள் தேவைப்படாத நிலை உருவாகும் என்றும் சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டுவருகிறது.
ஆலோசனைகள்
- சென்னையின் திடக் கழிவு சார்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றைக் கையாள்வதற்கான தீர்வுகளை ‘சந்தியா வியூகம்சார் முதலீடு-ஆலோசனை’ (SSIA) என்கிற கழிவு மேலாண்மைக்கான ஆலோசனை நிறுவனம் முன்மொழிந்துள்ளது:
- 1.கழிவு-ஆற்றல் அலகுகள்;
- 2. எரிஉலைகள் மூலம் குப்பைகளை எரித்தல்;
- 3. குப்பைகளை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகத்துக்கு விற்றல்.
- இந்த முன்மொழிவுகளுக்குத்தான் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ள – குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளைச் சுட்டிக்காட்டி, சென்னையில் திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு அத்தகைய தீர்வு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயல் முறையில், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள், சாம்பலில் இருந்து கற்கள் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களையும் சென்னை மாநகராட்சி உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
- குப்பையை எரித்து மின்சாரம் பெறுவது குப்பையைக் கையாள்வதில் ஒரு புதிய முயற்சிதான். எனினும், அந்த நடைமுறையின் விளைவுகள்சுற்றுச்சூழலுக்கும் மக்களின் உடல்நலனுக்கும் மேலதிகத் தீங்கைக் கொண்டுவரக்கூடும். கோட்பாட்டு அளவில் இதுவொரு சிறந்த தீர்வாக இருந்தாலும், தரம் பிரித்தல் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் விதிகள் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே திட்டத்தின் நோக்கத்தை நடைமுறையில் எட்ட முடியும்.
- எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கவும் முடியும். வளர்ந்துவரும் நாடுகள் வளர்ச்சியைக் காரணம்காட்டி சுற்றுச்சூழல் விதிகளைத் தாராளமாகத் தளர்த்தியும் மீறியும் வருகின்றன. இந்நிலையில், திடக் கழிவு மேலாண்மை, மின் உற்பத்தி என்கிற இரண்டு முக்கிய நடவடிக்கைகள் சார்ந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த முன்னெடுப்பு, உடனடித் தேவைக்காக நீண்டகால நலன்களைப் பலிகொடுத்திடாத வகையில் ஒரு முன்மாதிரிச் செயல்பாடாக அமைய வேண்டும்.