ஒழுங்கற்ற பருவமழையும் காலநிலை மாற்றமும்
- இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதாகவும் இதன் பின்னணியில் காலநிலை மாற்றம் உள்ளதாகவும் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
- கடந்த சில ஆண்டுகளாக, காலநிலை மாற்றத்தினால் உலக அளவில் பருவநிலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துவந்த நிலையில், தற்போது அரசாங்கங்களும் அதை வழிமொழியத் தொடங்கியுள்ளன.
- காலநிலை மாற்றத்தினால் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டும் தாமதமாகத் தொடங்கியதாகக் கூறும் விஞ்ஞானிகள், அதன் தீவிரத் தன்மையால் நாட்டின் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் அதேவேளையில் நாட்டின் பிற பகுதிகள் தீவிர வறட்சி, அதிக வெப்பநிலையை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
- இவ்வாறு இந்தியாவில் ஒருபுறம் தீவிர மழைப்பொழிவும் மறுபுறம் மழையின் மையால் வறண்ட நிலையும் நிலவுகின்றன.
- இச்சூழலில், இனிவரும் காலங்களிலும் சீரற்ற பருவமழையை இந்தியா எதிர்கொள்ளுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பருவமழையில் தாக்கம்:
- காலநிலை மாற்றத் தினால் நிலம்-கடல்சார் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும் வளிமண்டலத் திறன் அதிகரிக்கிறது.
- இதன் காரணமாகத் தீவிர வானிலை நிகழ்வுகளை உலக நாடுகள் எதிர்கொள்கின்றன. இந்தியாவிலும் அதுவே எதிரொலிக்கிறது.
- காலநிலை மாற்றத்தினால் இந்தியப்பெருங்கடலும் அரபிக் கடலும் வழக்கத்தைவிடக் கூடுதலாக வெப்பமடைந்துவருகின்றன. இவை வளிமண்டலத் தட்பவெப்ப நிலையைப் பாதிப்பதுடன், பருவமழை பொழிவதில் ஒழுங்கற்ற முறையையும் ஏற்படுத்துகின்றன.
- இந்த அடிப்படையில் பருவநிலையில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவது அவசியமாகிறது.
இந்தியாவில் என்ன பாதிப்பு?
- மத்திய இந்தியா வில் காலநிலை மாற்றத்தினால் தீவிர கனமழைப் பொழிவுகள் கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றன.
- சமீபத்தில் பருவமழையினால் வடகிழக்கு மாநிலங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன. தீவிர மழை,வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களால் பொருளாதாரச் சேதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை அஸ்ஸாம், பிஹார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளம்,பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம் ஆகியவைகாலநிலை சார்ந்து பாதிக்கப்படும் மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
- மேலும், காலநிலை மாற்றத்தால் அரபிக்கடலில் புயல்கள் உருவாவது அதிகரித்துவருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
- வங்காள விரிகுடாவுடன் ஒப்பிடுகையில் அரபிக்கடல் எப்போதும் குளிர்ச்சியான தன்மைகொண்டது.
- ஆனால், காலநிலை மாற்றத்தினால் கடந்த 40 வருடங்களில் அரபிக் கடல்அதன் இயல்பிலிருந்து மாறுதல்களைச் சந்தித்துவருகிறது.
- இதற்கிடையில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதால், இந்தியாவில் வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் தீவிரமடையும் வாய்ப்புள்ளதாக மத்திய புவி – அறிவியல் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
உணவு-நீர் பற்றாக்குறை:
- காலநிலை மாற்றம் பருவமழையில் ஏற்படுத்தும் தாக்கமானது இந்தியாவில் விவசாய உற்பத்தியை வெகுவாகப் பாதித்துவருகிறது.
- குறிப்பாக, இந்தியாவில் அதிகளவு பயன்பாட்டில் உள்ளஅரிசி, கோதுமை உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படலாம் என அச்சம் நிலவுகிறது.
- இதனால்,உலக நாடுகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்படலாம். இதன் விளைவால் உணவு நெருக்கடி, பஞ்சம் போன்றவை ஏற்படலாம். காலநிலைமாற்றம் காரணமாகவும், அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்இருப்பதாக ஐநா எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கைகள்:
- காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை எதிர்கொள்ளவும், புவி வெப்பமாதலைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக இறங்க வேண்டும்.
- காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது அரசுகளின் கடமை என்றில்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையைப் பின்பற்றுவதில் ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
- பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தவும் வேண்டும். தண்ணீர்-உணவுப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
- காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி / இழப்பீடு வழங்க ஐநா தலைமையின் கீழ் உள்ள காப் (Conference of Parties) நாடுகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
- அதன்படி, இழப்பீடுகளை உரிய நாடுகளுக்கு வழங்குவது, காலநிலை மாற்றத்துக்கான பாதிப்பின் தீவிரத்தைச் சம்பந்தப்பட்ட நாடுகள் உணர்ந்துகொள்ள வழிவகுக்கும்.