இந்தியாவில் பருவமழைக் குறைவினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரி

  • இந்தியாவில் விவசாயம் பருவமழையைப் பொறுத்தது. பருவமழைக் குறைவு காரணமாக, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும். இது உணவுப் பற்றாக்குறையையும் விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தும்.

பருவமழைக் குறைவின் தாக்கம்: பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயம்

  • 2023 இல் தென்மேற்குப் பருவமழை போதுமான மழைப்பொழிவைக் கொடுக்காததன் விளைவாக விவசாயத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தற்போது விவாதங்கள் நடக்கின்றன. 
  • எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைகிறதோ, அப்போதெல்லாம் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மறுபுறம், கடந்த ஐம்பது ஆண்டுகளில், நீர்ப்பாசன உள்கட்டமைப்பில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளதால், விவசாயத்தில் பருவமழையின் தாக்கம் காலப்போக்கில் குறைந்துள்ளது என்றும் சிலர் வாதிடுகின்றனர். நிதர்சனம் என்ன?

படிப்படியான சரிவு: 

  • இந்தியா சராசரியாக ஓர் ஆண்டில் சுமார் 1,180 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது. 
  • இந்த மழையளவு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ள நான்கு முக்கிய மழை மண்டலங்களான வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியா, மத்திய இந்தியா, தென் தீபகற்ப இந்தியா ஆகியவற்றுக்கு இடையே பெரியளவில் வேறுபடுகிறது. ஓர் ஆண்டின் மொத்த மழையளவில், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெறப்படும் மழை மட்டும் சுமார் 75% அல்லது 870 மில்லிமீட்டா். 
  • எனவே, தென்மேற்குப் பருவமழையின் அளவு அதன் சராசரி மழைப்பொழிவிலிருந்து, பெரியளவில் குறைந்தால் விவசாயத்தில் கணிசமான பாதிப்பு ஏற்படும்.
  • 1990 முதல் 2021 வரையிலான தரவுகளை உள்ளடக்கி, விவசாயத் துறையில் பருவமழையின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஒரு பகுப்பாய்வில், கடந்த 32 ஆண்டுகளில், 17 முறை சராசரி மழை அளவைவிடக் குறைவான மழையை இந்தியா பெற்றுள்ளது தெரியவந்திருக்கிறது. 
  • அதாவது, ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டுக்கு அடுத்த ஆண்டில், பருவமழை அதன் இயல்பைவிடக் குறைவாகப் பெய்துள்ளது. 20 ஆண்டுகளில் 30% மொத்த இந்திய மாவட்டங்கள் இயல்பைவிடக் குறைவான மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு மழைப்பொழிவு மாறுதலைப் (deviation) பொறுத்தவரை, தென்மேற்குப் பருவமழையானது, ஆறு ஆண்டுகளில் அதன் இயல்பிலிருந்து 10%க்கும் குறைவாகவும், நான்கு ஆண்டுகளில் 5%-10%க்கும் குறைவாகவும் மழைப்பொழிவைத் தந்துள்ளது.
  • கடந்த 32 ஆண்டுகளில், 12 ஆண்டுகளில் மட்டுமே தென்மேற்குப் பருவமழை அதன் சராசரி அளவைவிடச் சற்று அதிகமாகப் பெய்துள்ளது. பெரும்பாலான ஆண்டுகளில் மழைப்பொழிவு அதன் இயல்பிலிருந்து குறைவாகக் கிடைத்திருக்கிறது. 
  • குறிப்பாக, 2014 முதல் 2018 வரையிலான ஐந்து ஆண்டுகளில், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு தொடர்ச்சியாக, அதன் சராசரி அளவைவிடக் குறைவாக இருந்துள்ளது.

பாசனப் பரப்பளவில் தாக்கம்: 

  • மழைப்பொழிவில் ஏற்படும் பற்றாக்குறையால், நீர்ப்பாசனப் பரப்பளவு, சாகுபடிப் பரப்பளவு, பயிர்களின் மொத்த உற்பத்தி ஆகிய மூன்று அளவுருக்களில் சரிவு ஏற்படுவதைக் காண முடியும். மழை அளவுக்கும் கால்வாய், குளம், பிற சிறிய நீர்நிலைகள் மூலம் செய்யப்படும் பாசனப் பரப்பளவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. 
  • பெரிய அளவிலான மழைப் பற்றாக்குறையானது (இயல்பைவிட 10%க்கும் குறைவாக), அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்தைக் குறைத்து, பாசனப் பரப்பளவில் கணிசமான அளவுக்குச் சரிவை எற்படுத்தும். 1990 முதல் 2021 வரை மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு, இயல்பைவிட 10%க்கும் குறைவாக மழைப்பொழிவு இருந்த அனைத்து ஆண்டுகளிலும் நீர்ப்பாசனப் பரப்பளவில் (குறிப்பாகக் குளங்கள்) கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
  • உதாரணமாக, 2000, 2002, 2009, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில், தென்மேற்குப் பருவமழையின் பற்றாக்குறை 10%க்கும் அதிகமாக இருந்துள்ளது. 
  • இந்த ஆண்டுகளில் நீர்ப்பாசனப் பரப்பளவு, அதன் முந்தைய ஆண்டைவிடக் கணிசமாகக் குறைந்துள்ளது. 
  • மழைப்பொழிவின் குறைவு பயிர்களின் சாகுபடிப் பரப்பளவையும் பாதிக்கிறது. இந்தியாவில் தற்போது 50%க்கும் அதிகமான சாகுபடிப் பரப்பளவு, நீர்ப்பாசனமற்ற மானாவாரிப் பகுதிகளாக இருப்பதால், பெரிய அளவிலான மழைப் பற்றாக்குறையானது, நிகர-மொத்த பயிர்ச் சாகுபடிப் பரப்பளவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • ஊட்டச்சத்து தானியப் பயிர்கள் (சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, மக்காச்சோளம்), பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றின் பெரும்பாலான பரப்பளவு, நீர்ப்பாசனமற்ற மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுகிறது. 
  • இப்பயிர்களின் சாகுபடிப் பரப்பளவைத் தீர்மானிப்பதில் பருவமழை முக்கியப் பங்கு வகிக்கிறது. தென்மேற்குப் பருவ மழையை நம்பி காரீஃப் பருவத்தில் செய்யப்படும் முக்கியப் பயிர்களின் பரப்பளவை, குறைவான மழைப்பொழிவு பெற்ற மாவட்டங்களின் சதவீதத்துடன் ஒப்பிட்டு செய்யப்பட்ட ஒரு பகுப்பாய்வு, குறைவாக மழை பெற்ற மாவட்டங்களில் ஊட்டச்சத்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றின் பரப்பளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
  • உதாரணமாக, 2002இல் தென்மேற்குப் பருவமழைப் பற்றாக்குறை சுமார் 22%ஆக இருந்தது. அந்த ஆண்டில், நெல் சாகுபடிப் பரப்பளவு அதன் முந்தைய ஆண்டைவிட 37.2 லட்சம் ஹெக்டேர் குறைந்தது. இதேபோல் பருப்பு வகைகளில் 19.6 லட்சம், எண்ணெய் வித்துக்களில் 11.5 லட்சம், பருத்தியில் 24.6 லட்சம் ஹெக்டேர் சாகுபடிப் பரப்பளவு சரிந்தது. 
  • இதேபோன்று, 2009ஆம் ஆண்டிலும் மழைப் பற்றாக்குறை பெருமளவில் (21.4%) இருந்தது, அங்கும் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. 
  • பருவமழையின் தாக்கம் இந்திய விவசாயத்தில் குறைந்துவிட்டது என்பது உண்மையானால், முக்கியப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவு இந்த அளவுக்குக் குறைந்திருக்கக் கூடாதல்லவா?

உற்பத்தியில் தாக்கம்: 

  • பற்றாக்குறை மழைப்பொழிவானது உரம், இடுபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து, பயிர்களின் விளைச்சலைக் குறைப்பதோடு, அவற்றின் மொத்த உற்பத்தியையும் குறைத்துவிடும். 
  • இதுவும் இந்தியாவில் நடந்திருக்கிறது. 1990 முதல் 2021 வரையிலான தரவுகளின் பகுப்பாய்வின்படி, தென்மேற்குப் பருவமழைப் பொழிவு அதன் இயல்பிலிருந்து கடுமையாகக் குறைகின்றபோதெல்லாம், காரீஃப் பருவகாலத்தில் செய்யப்படும் முக்கியப் பயிர்களின் உற்பத்தி கணிசமாகக் குறைவது நிரூபணமாகியிருக்கிறது. 
  • மழைப்பொழிவு குறையக் குறைய விவசாய உற்பத்தியும் குறைகிறது. குறிப்பாக, மானாவாரி நிலங்களில் முக்கியமாகப் பயிரிடப்படும் பயிர்களில் (ஊட்டச்சத்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்) உற்பத்தியின் வீழ்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது.

கள நிலவரம்: 

  • பாசனப் பரப்பளவு, பயிர் செய்யப்பட்ட பரப்பளவு, பயிர்களின் உற்பத்தி ஆகியவற்றில் மழைப் பற்றாக்குறையின் பாதகமான விளைவுகள் கடந்த 32 ஆண்டுகளில் குறைந்துவிடவில்லை என்பதைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் நீர்ப்பாசனப் பரப்பளவுக்கும் மழையின் அளவுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பைப் புரிந்துகொள்ளாமல், விரிவாக்கப்பட்ட நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள், குறைவான மழையால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதாகக் கருதுவது தவறானது. 
  • காலநிலை மாற்றம் காரணமாக, மழைப்பொழிவில் அதிகரிக்கும் மாறுபாடுகள் வருங்காலங்களில் ஒரு புதிய இயல்பாக (new normal) இருக்கும்.
  • எனவே, பயிர்களின் உற்பத்தியில் மழையின் தாக்கத்தைக் குறைக்க நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட தணிப்பு உத்திகளை உருவாக்க வேண்டும். 
  • குறைந்த நீரைக் குடிக்கும் பயிர்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், தண்ணீரைச் சேமிக்கக்கூடிய, நவீன சொட்டுநீர் (drip irrigation), தெளிப்பு நீர் (sprinkler irrigation) நீர்ப்பாசன முறைகள் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால், குறைவான மழைப்பொழிவால் ஏற்படும் தாக்கத்தை விவசாயத்தில் குறைக்க முடியும். உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் நீர்ப்பாசனப் பயன்பாட்டுத்திறன் (water use efficiency) மிகக் குறைவு (சுமார் 35%). இதனை அதிகரிக்க பெரிய அளவிலான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!