இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான காரணங்கள்,விளைவுகள் மற்றும் தீர்வுகளை விவாதிக்க

இயல்பை இழக்கும் இமயமலை

  • இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் ரீதியாகப் பலவீனமானவை எனக் கருதப்படும் இடங்களில் எழுப்பப்பட்ட சாலைகளும், பாலங்களும், கட்டிடங்களும் இயற்கைப் பேரிடர்களான வெள்ளத்தினாலும் நிலச்சரிவுகளினாலும் அழிவுகளைச் சந்திக்கின்றன. 
  • வளர்ச்சி என்ற பெயரில் இமயமலையின் சுற்றுச்சூழல் நலன்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு, வணிக நோக்கத்துக்காக மலைப்பகுதிகள் அழிக்கப்படுவதால் இமயமலை தனது இயல்பை இழந்துவருவதாகத் தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டுவருகிறது.
  • இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இமயமலைத் தொடர்கள் பரவியிருக்கின்றன. 
  • இதில் இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட் மாநிலங்களில் தொழில்மயமாக்கலும் நகர்மயமாக்கலும் பலவீனமான இடங்களில் உருவாக்கப்பட்டு வருவதால், அவற்றுக்கான பின்விளைவுகளையும் அப்பகுதிகள் சந்தித்துவருகின்றன.

விதிகளை மீறும் திட்டங்கள்: 

  • அதிகரித்துவரும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுவருகின்றன.
  • மலைப் பகுதிகளில் உருவாக்கப்படும் சாலை விரிவாக்கப் பணிகளின்போது ஏராளமான விதி மீறல்கள் நடைபெறுகின்றன. 
  • உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வா பகுதியில் ‘சார் தாம்’ நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக லட்சக் கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன; காடுகள் பாதிக்கப்பட்டன. 
  • இத்திட்டங்களால் உருவாகும் சகதி இமயமலைப் பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதித்துவருகிறது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத் தலங்களை இணைக்கும் வகையில்தொடங்கப்பட்ட ‘சார் தாம்’ நெடுஞ்சாலைத் திட்டம்,உத்தராகண்ட் மாநிலம் சந்தித்துவரும் பேரழிவுகளுக்குஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. 
  • புனிதப்பயணத்துக்கான வழித்தடத்தைச் சுற்றுலாத்தலத்துக்கான பாதையாக மாற்ற அரசு முயற்சிப்பதால், இந்தப் பிரச்சினைஏற்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

வளர்ச்சிப் போட்டி: 

  • மலைப் பகுதிகளில் உயரமான ரயில் பாதைகளை அமைப்பதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவிவருகிறது. 
  • மலைப் பகுதியில் ரயில் பாதை அமைக்கும்போது பாறைகளின் தன்மையை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். 
  • ஆனால், போட்டி மனப்பான்மையால் சுற்றுச்சூழல் சமநிலை பேணுதல் இங்கு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. சீனாவில் அமைந்துள்ள திபெத் மலைத் தொடர்கள் உறுதியான பாறைகளால் ஆனவை. 
  • ஆனால், இந்தியாவில் அமைந்துள்ள இமயமலைத் தொடர் நிலைத்தன்மை அற்றவை.
  • உலகின் இளமையான மலையான இமயமலையில் இன்னமும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என உத்தராகண்ட் மாநிலம் கருதப்படுகிறது. 
  • மேலும், பனியாறு உருகுதல், மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற ஆபத்துகளையும் உத்தராகண்ட் எதிர்கொள்கிறது. 
  • இப்படியான சூழலில் சாலை விரிவாக்கம், சுரங்கம் அமைத்தல் போன்ற பாதுகாப்பற்ற கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

தலையிட்ட உச்ச நீதிமன்றம்: 

  • வட இந்தியாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, அதிகார மட்டத்தில் இருப்பவர்களைக் கவலையடைய வைத்தது. 
  • இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இமயமலைப் பகுதியின் நில அமைப்பின் தாங்கும்திறன் குறித்து முழுமையான, விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். 
  • இதனைத் தொடர்ந்து 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. மேலும், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அனைத்து மாநிலங்களில் மலைப் பாதையின் தாங்கும்திறன் குறித்த ஆய்வை மேற்கொண்டு விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
  • 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நீர்மின் திட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது. 
  • அக்குழுவெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில் நீர்மின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறைக்கப்பட்டது. 
  • ஆனால், நிலஅமைப்புக்குப் பொருந்தாத மலைப்பாதை விரிவாக்கத்தையும், மலையைக் குடைந்து சுரங்கம் வேண்டும் ஏற்படுத்தும் பணி களையும் அவை தடுக்கவில்லை என்பதே உண்மை நிலவரம்.

காரணம் என்ன? 

  • காலநிலை மாற்றம் காரணமாக, இமயமலைப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை இருந்த சராசரி வெப்பநிலை, இப்போது மைனஸ் 2 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 
  • இவ்வாறான நிகழ்வுகள்தான் இமயமலைப் பகுதிகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆபத்தானதாக மாற்றியுள்ளன. சமவெளிகளில் இருப்பது போல் மலைப்பாதைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாது என்ற யதார்த்தத்தை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். 
  • இந்தியாவுக்கு எல்லைச் சாலைகள் தேவைப்பட்டால், அவை உறுதியான பாறை நிலப்பரப்பில் அமைக்கப்பட வேண்டும். இமயமலையில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் நீர்மின் திட்டமும் முழுமையாகத் தடைசெய்யப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தீர்வு: 

  • மலைப் பிரதேசங்களில் அணைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நகரமயமாக்கல் ஆகியவற்றை மதிப்பிட, வழிகாட்ட, கண்காணிப்பதற்கான மத்திய அரசின் கொள்கையும் அணுகுமுறையும் மாற வேண்டும். 
  • மலைப் பகுதிகளில் நிலத்தின் தன்மையை உணர்ந்து போக்குவரத்தில் ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் மலைப் பகுதிகளில் மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கொள்கை வழிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும். 
  • வரையறையற்ற கட்டுமான விரிவாக்கத்தால் உத்தராகண்ட்டின் ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஜோஷிமட் நகரம் எதிர்கொண்டுவரும் அபாயம் குறித்து, இஸ்ரோ ஆய்வு நடத்தியது. 
  • அதன் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், அபாயகரமான பகுதிகளில் உத்தராகண்ட் அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
  • இதே மாதிரியான ஆய்வை இமயமலைப் பகுதி முழுவதும் நடத்த வேண்டும். அந்த ஆய்வின் அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!