சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட  பேரிடரை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பற்றி விவாதிக்க

மிக்ஜாம் புயல்

  • சென்னையைத் தத்தளிக்கச் செய்த மிக்ஜாம் புயல், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. 2015 மழை வெள்ளத்தின்போது சென்னை எவ்வாறு தத்தளித்ததோ அதே காட்சிகள் சற்றும் மாறாமல் எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரேங்கேறியுள்ளன. 
  • தீவிரக் காலநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 2015 டிசம்பர் மாதம் சென்னையில் பொழிந்த வடகிழக்குப் பருவமழை, நீங்காத கறுப்புப் பக்கங்களை விட்டுச்சென்றது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட புயல், மழைகளிலிருந்து நாம் பெற்ற படிப்பினைகள் என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எதைச் சரியாகச் செய்தோம், எதில் தவறினோம் என்கிற கேள்விகள் பொதுத் தளத்தில் எழுந்துள்ளன.

நடவடிக்கைகள்

துல்லியமான வானிலை அறிவிப்பு: 

  • வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி, மிக்ஜாம் புயலாகமாறியதுவரை விரிவான, தெளிவான முன்னறிவிப்புகளை வானிலை நிலையங்கள், தனியார் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்தனர். 
  • இதன் மூலம் மிக்ஜாம் புயல் நகர்ந்துவரும் பாதையை அறிந்து, அதனை எதிர்கொள்வதற்கான யோசனைகளை வகுப்பதற்கான போதுமான அவகாசம் நமக்கு இருந்தது. இதன் அடிப்படையில், சென்னைவாசிகளுக்கு முன்னெச்சரிக்கைகளை அரசு விடுத்தது. கரையோரம் தங்கியிருக்கும் மக்களை முகாம்களில் தங்க வைத்தது. 
  • சுகாதார நிலையங்களையும், பேரிடர் மீட்புக் குழுவையும் தயார்நிலையில் வைத்தது. மிக்ஜாம் புயல் சென்னை அருகே நகர்ந்து செல்லும் நேரத்தைக் கணிப்பதில் மட்டுமே சற்று வேறுபட்ட தகவல்கள் இருந்தன.

பேரிடரை எதிர்கொள்ளல்: 

  • மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள, அரசின் தயார்நிலை ஏற்பாடுகள் எல்லோருக்குமானதாக இருந்ததா? பெருமழையினால் சென்னையின் தெற்கு, மேற்கு, புறநகர்ப்பகுதிகளில் வாழும் மக்கள் பல நாட்களாக வெள்ளம் சூழ்ந்திருக்கும் சூழலே நிலவியது. 
  • மேலும், அம்பத்தூரில் உள்ள ஆவின் உற்பத்திஆலையில், மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் உற்பத்தியில் தடை ஏற்பட்டது. பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இரண்டு நாட்களாகக் கிடைக்காத நிலை நீடித்தது. 
  • இவற்றை எல்லாம் அரசு முன்னரே கவனத்தில் கொண்டு முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். வட சென்னை, தென்மேற்குப் புறநகர் பகுதிகளில் வசித்த மக்கள், மிகக் குறைந்த உதவியைப் பெற்றதாகவும், பெரும்பாலான பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 
  • அடுத்து, வெள்ளம் பாதித்த இடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் தாமதமாகவும், குறைவான எண்ணிக்கையிலுமே வந்தனர் (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) என்கிற குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் வைக்கின்றனர்.

நீர்த்தேக்க வெளியேற்றம்: 

  • கனமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்த்தேக்கங்களிலிருந்து முன்கூட்டியே நீரைத் தமிழக அரசு வெளியேற்றியது. மேலும், வெள்ளப் பாதிப்பை அறிந்து அடையாறு, கூவம் நதியோரம் வாழும் மக்களை அரசு விரைவாக இடமாற்றம் செய்தது. 
  • 2015ஆம் ஆண்டு வெள்ளப் பாதிப்புடன் ஒப்பிடுகையில் மிக்ஜாம் புயலினால் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒன்று. 2015இல், செம்பரம்பாக்கத்திலிருந்து அதிகளவு தண்ணீர் ஒரே இரவில் திறந்துவிடப்பட்டது. 
  • நீர் திறப்பு குறித்துப் போதிய முன்னெச்சரிக்கைகள் அப்போதைய அரசு விடுக்காததால் உயிரிழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்டது. 
  • இம்முறை 2015 அளவுக்கு ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

உதவிய மழைநீர் வடிகால்: 

  • சென்னையில் 24 மணி நேரமும் இடைவிடாது பெய்த மழையினால், நகரின் அனைத்துச் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. 
  • இக்கட்டான நிலையில் அலைகள் அதிகம் இருந்ததால் கடலும் வெள்ள நீரை உள்வாங்கவில்லை. 
  • இருப்பினும், திங்கள்கிழமை இரவு மழை நின்ற சில மணி நேரத்துக்குப் பிறகு, சென்னையின் முக்கியச் சாலைகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கியது. 
  • சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் திட்டமும் நகரின் பிற பகுதிகளில் தண்ணீர் இறங்க உதவியதால் கிட்டத்தட்ட 40-45 செமீ அளவு பதிவான மழையை அரசால் கையாள முடிந்தது.

திட்டமிடப்படாத நகரம்: 

  • கட்டிட விதிமீறல்களால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் சென்னை பாதிப்பைச் சந்தித்து வருகிறது. 
  • வளர்ச்சி என்றகாரணத்தைக் காட்டி நீர்நிலைகள், கால்வாய்களில் கட்டிடங்கள் எழுப்ப அனுமதி அளிப்பது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது. 
  • இந்த விதிமீறல்களால் சென்னை திட்டமிடப்படாத நகரமாக உருமாறி வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மின்சாரப் பாதிப்பு & சமூக ஊடக அணுகல்: 

  • வெள்ளப் பாதிப்பினால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரம் பல இடங்களில் நிறுத்தப்பட்டது. மின் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகச் செய்திகள் வந்தாலும், பேரிடர்க் காலங்களில் மக்களுக்கு முதலில் ஏமாற்றத்தைத் தருவது மின்சாரம்தான். 
  • சில இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால், உதவி வேண்டி மக்கள் அரசை அணுகுவதில் தடைகள் இருந்தன. 
  • பேரிடர்க் காலங்களில் சமூக ஊடகங்களைச் சரியாகக் கண்காணித்து, உதவி கேட்கும் மக்களைச் சென்றடைவது முக்கியப் பணி. அந்த வகையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான அணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவைகளைச் செய்தது. 

காலநிலை மாற்றத்தினால் வரும் காலங்களில் சென்னை எதிர்கொள்ளவிருக்கும் பேரிடர்களைக் கையாள்வதற்கு, மிக்ஜாம் புயல் அளித்துச் சென்றிருக்கும் அனுபவத்திலிருந்து அரசு, அதிகாரிகள், மக்கள் என ஒட்டுமொத்தச் சமூகமும் பாடம் கற்ற வேண்டியது அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!