காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்கள், விளைவுகளை பட்டியலிட்டு அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை விவாதி

நோய்களை வரவேற்கும் காற்று மாசு!

  • இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீபாவளியன்று, காற்றின் தரம் மோசமான அளவுக்குச் சரிந்திருந்தது. 
  • குறிப்பாக, சென்னையில் காற்றின் தரம் மோசமான அளவிலிருந்து மிகவும் மோசமான அளவுக்குச் சென்றிருந்தது. 
  • இந்தியாவைப் பொறுத்தவரை சமீப காலமாகக் காற்று மாசு, சுகாதார நெருக்கடியாக மாறியிருக்கிறது. இந்தியாவில் நிகழும் மரணங்களில், 10.5% காற்று மாசு காரணமாக நிகழ்கின்றன.
  • உலகெங்கிலும் ஆண்டுதோறும் 91% மக்கள் காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர். 
  • இதில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழக்கின்றனர். தற்போது காற்று மாசு மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சினை என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகிறது.

காற்று மாசின் விளைவுகள்: 

  • வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையானது நுரையீரல் தொடர்பான நோய்களுக்குக் காரணமாகிறது. 
  • உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் ஏற்படக் காற்று மாசு காரணமாக இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
  • உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், இதயப் பிரச்சினைகள் காற்று மாசுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், நச்சு வேதிப்பொருள்கள் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால் சுவாசிப்பது கடினமாகிறது.
  • இந்தப் பாதிப்பானது, நாளடைவில் நுரையீரல் செயல்பாட்டையும் குறைக்கிறது. மேலும், ஏற்கெனவே இருக்கும் உடல் பாதிப்புகளைத் தீவிரப்படுத்துகிறது. 
  • அசுத்தமான காற்றில் காணப்படும் பென்சீன், ஃபார்மால்டிஹைடு போன்றவை புற்றுநோய்க் காரணிகளாக அறியப்படுவதால், அவற்றைச் சுவாசிக்கும்போது புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
  • காற்று மாசு தோல் சார்ந்த நோய்களை ஏற்படுத்துவதுடன், தோலில் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கும் காரணமாகிறது.

பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள்: 

  • ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் காற்று மாசு காரணமாக ஒரு குழந்தை இந்தியாவில் உயிரிழக்கிறது. 
  • 1990-2017ஆம் ஆண்டுவரை குழந்தை இறப்பில் காற்று மாசு முக்கியப் பங்குவகித்து வந்திருக்கிறது. காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கும்போது குழந்தைகள் சுவாசப் பிரச்சினைகளுடன், எடை குறைவாகவும் பிறக்கின்றன. பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் முழுமையான வளர்ச்சியடைந்த சுவாச மண்டலத்தைக் கொண்டிருப்பதில்லை. 
  • இதனால், காற்று மாசால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு இறப்புகளும் ஏற்படுவதாகச் சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

எச்சரிக்கை: 

  • மார்ச் 2022இல் சுவிட்சர்லாந்தின் ‘ஐக்யூ ஏர்’ (First in Air Quality – IQAir) அமைப்பு வெளியிட்ட உலகக் காற்றுத் தர அறிக்கை, இந்தியாவுக்கான எச்சரிக்கை மணியை அடித்தது. உலக அளவில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள 50 நகரங்களில் 35 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • தொடர்ந்து 5ஆவது ஆண்டாக உலகின் மிகவும் மாசடைந்த நகரமாக டெல்லி நீடிக்கிறது. காற்று மாசின் காரணமாக, இந்தியா பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுடன் பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுவருகிறது.

என்ன காரணம்? 

  • இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள், கடந்த 20 ஆண்டுகளில் தொழில்மயமாக்கல், பொருளாதாரம், மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன. இதன் காரணமாகப் பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. 
  • இந்தியாவில் காற்று மாசு ஏற்பட வாகன உமிழ்வுகள், மின் உற்பத்தி, தொழிற்சாலைக் கழிவுகள், கட்டுமானத் துறை, பயிர்க் கழிவு எரிப்பு, சமையலுக்கு உயிரி எரிபொருள்களை எரித்தல், மனிதச் சடலங்கள் தகனம் போன்றவை முக்கியக் காரணமாகின்றன. 
  • தலைநகர் புது டெல்லியில் இந்த ஆண்டு சடலங்கள் தகனத்தினால் 38% காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

முன்னுதாரண சீனா: 

  • சீனாவின் பொருளாதாரம் ஏற்றம் கண்டபோது அங்கும் இந்தியாவைப் போல் காற்று மாசுபாடு அதிகரித்தது. 
  • சீன நகரங்களில் காற்றின் தரம் தீவிரமாகக் குறையும்போது, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் காற்று மாசு காரணமாக உயிரிழந்தார்கள். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த சீனா, நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தத் திட்டங்களைத் தீட்டியது. 
  • இதன் தொடர்ச்சியாய், புதிதாக அனல்மின் நிலையங்கள் நிறுவப்படுவது தவிர்க்கப்பட்டது. பழைய ஆலைகள் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து, மின்சாரப் பேருந்துகளைப் பரவலாக்கியது சீன அரசு. 
  • இதன் பலனாகக் கடந்த சில ஆண்டுகளாகக் காற்றின் தரத்தை சீனா மேம்படுத்தியிருக்கிறது. 
  • காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையே நாள்தோறும் அதிகரிக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் உணர்த்துகின்றன.

என்ன தேவை? 

  • காற்று மாசு பிரச்சினையும் காலநிலை மாற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்து, அதற்கேற்பத் திட்டமிடுதல் அவசியமாகிறது. 
  • அனல்மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்மான நடவடிக்கைகள் தேவை. காற்றின் தரத்தைக் கண்டறிவதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கலாம். 
  • தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி பொதுப் போக்குவரத்து முறையை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் அவசியம்.
  • காற்று மாசைக் குறைப்பதற்காக 2019-20, 2021-22இல் ரூ.400 கோடி நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியது. 
  • ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் காற்று மாசு குறைப்பு நடவடிக்கைகளுக்காக நிதியைச் சிறப்பாகப் பயன்படுத்தின. அதேவேளை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொடுக்கப்பட்ட நிதியில் 50%ஐ மட்டுமே பயன்படுத்தியிருந்தன. 
  • எனவே, காற்று மாசைக் கட்டுப்படுத்த ஒதுக்கப்படும் நிதி, அதற்கான நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதிசெய்வது அவசியமாகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!