புவியின் நீரின் அவசியத்தையும் நீர் இன்றி வரும் பிரச்சனைகளை இந்தியா மற்றும் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி விவாதிக்க 

நீர்

  • இன்று உலகெங்கும் நாடுகளுக்கு இடையேயும், இனங்களுக்கு இடையேயும் தண்ணீர் ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கொடுமையான இரண்டு உலகப் போர்களை இந்த உலகம் பார்த்துவிட்டது. 
  • மூன்றாவது உலகப் போர் மூண்டால், அது உலகப் பேரழிவாகத்தான் முடியும் என அனைவரும் அறிந்துள்ளனர். அப்படி மூன்றாவதாக ஒரு உலகப் போர் மூளுமேயானால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என அறிஞர்கள் அஞ்சுகின்றனர்.
  • மனிதரின் வாழ்வுடனும், வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்து அவர்களது பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம், மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம் என அனைத்தையும் வழிநடத்தி வந்துள்ள அதிசயப் பொருள் தண்ணீர், என்றால் அது மிகையல்ல.

பூமியில் நீர்

  • பூமிப் பந்தில் 70 விழுக்காட்டுக்கும் மேல் கடல்தான் என நாம் அறிவோம். உலகத்தின் தண்ணீர் இருப்பில் மனிதகுலம் குடிக்கவும், விவசாயம் செய்யவும், தொழிற்சாலை இயக்கவும் பயன்படுத்தும் நீர் வெறும் 0.26 விழுக்காடு மட்டுமே. 
  • மற்ற நீரெல்லாம் கடலின் உவர் நீராகவும், துருவங்களின் பனிப்பாறைகளாகவும் உள்ளன. 

நீர் மாசுபாடு  

  • இன்று இந்த 0.26 விழுக்காடு நீரும் பல்வேறு வகைகளில் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள், நமக்கான நன்னீரை நச்சாக்கி வருகின்றன. இந்த நஞ்சுநீர் பரப்பும் நோய்களுக்குப் பலியாகி நாள்தோறும் உலகெங்கும் 4,000 குழந்தைகள் இறந்து போகின்றன.
  • நல்ல தண்ணீர் கிடைக்கப்பெறுவது என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்வுரிமை மட்டும் அல்ல. அது அவன் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமையும்கூட என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

நீரின்றி வரும் பிரச்சனைகள் 

  • இன்று உலகத்தில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத 78 கோடி மக்கள் உள்ளனர். அவர்கள் சமூக அளவிலும், பொருளாதார நிலையிலும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களே ஆவர்.
  • இந்தியாவைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடி மக்களும்தான் தண்ணீர் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அண்ணல் அம்பேத்கார் நடத்திய முதல் சத்தியாகிரகம் தண்ணீர் உரிமைக்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, நம் நாட்டில் தண்ணீர் பிரச்சினை சாதிப் பிரச்சினையுடன் தொடர்புடையது.
  • தண்ணீர் பிரச்சினை உலக அளவில் பெண்களின் பிரச்சினையாகவும், குழந்தைகளின் பிரச்சினையாகவும்கூட உள்ளது. தண்ணீரைக் கண்டடைவது, வீட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பது, பாதுகாப்பது போன்ற வேலைகள் பெண்களின் வேலையாகவே பெரும்பாலும் உள்ளது. ஒரு நாளின் கணிசமான நேரம் தண்ணீரைத் தேடி அலைவதிலேயே ஏழைத் தாய்மார்களின் காலம் செலவழிந்துவிடுகிறது. 
  • ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன், சுகாதாரமற்ற தண்ணீரின் பாதிப்பும் சேர்ந்துகொள்ள எளிதில் நோய்களுக்கும், அதைத் தொடர்ந்து மரணத்துக்கும் ஆளாகின்றனர்.
  • தண்ணீர் பிரச்சினை வேலையில்லாப் பிரச்சினையுடனும் தொடர்பு கொண்டுள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ஒரு அதிர்ச்சிகரமானத் தகவலைத் தருகிறது. பயனற்றுப் போகும் ஒவ்வொரு விழுக்காடு நீருக்கும் 2 இலட்சம் வேலை இழப்புகள் ஏற்படுவதாக, அந்த விவரம் தெரிவிக்கிறது. இதனால் ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கைக்கான செலவும் அதிகரிக்கிறது. அரசும் கூடுதலாகச் செலவிட நேரிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.
  • இங்கு நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். தண்ணீர் பிரச்சினை என்பது போதிய அளவு தண்ணீர் இல்லாததால், வந்த பிரச்சினை அல்ல. ஏனெனில், 2006-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அறிக்கை உலக மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது என ஒப்புக்கொள்கிறது. பிறகு ஏன் இந்தப் பிரச்சினை?

நீர் மேலாண்மை

  • திட்டவட்டமான நீர் மேலாண்மையை கடைபிடிக்காததே தண்ணீர் பிரச்சினைகளுக்கு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். தண்ணீர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தண்ணீர் தகராறுகளுக்கான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை உருவாக்குவது, நாடுகளுக்கு இடையேயும் மக்கள் குழுக்களுக்கு இடையேயும் நீர்வளத்தை பகிர்ந்துகொள்ள சட்ட முறைகளை உருவாக்குவது போன்றவை திட்டவட்டமான நீர் மேலாண்மை என்பதில் அடங்கும்.
  • நீடித்த தண்ணீர் பயன்பாட்டுக்கும், திட்டவட்டமான நீர் மேலாண்மை அவசியம் ஆகும். நமக்கு மட்டும் இன்றி நாளைய தலைமுறையினருக்கும் காற்றும், நீரும், கடலும், கானகமும் சொந்தமல்லவா? வரப்போகும் தலைமுறையினருக்கு மிச்சம் மீதி இன்றி தண்ணீர் முழுவதையும் நாமே உறிஞ்சிகொள்ள, யார் நமக்கு உரிமை அளித்தார்கள்? எனவே, புத்திசாலித்தனமும் பொறுப்பும்மிக்க நீர் மேலாண்மை அவசியம் என்பதில் சந்தேகமில்லை.
  • இன்று உலகம் முழுவதும் 60 விழுக்காடு நீர், ‘ஒழுகிக் கொண்டிருக்கும் குழாய்’களால் வீணாகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் 1,400 கோடி அமெரிக்க டாலர் வீணாகிறது. ஆற்றுநீரை வீணாகக் கடலில் கலக்கவிடும் பெரிய தவறுகள் முதல், வீட்டுக் குழாயை ஒழுங்காக பராமரிக்காத சின்ன தவறுகள் வரை எல்லாமே நீர் மேலாண்மைக் குறைபாடுகள்தான்.

இந்தியாவில்…

  • இன்றைக்கு இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கான தண்ணீர் தேவை 700 பில்லியன் கியூபிக் லிட்டர்கள். மக்கள்தொகை வளர்ச்சி, நகர்மயமாக்கம், தொழில் பெருக்கம் ஆகியவற்றால் இந்த தேவை அளவு 2030ல் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சமாளிக்க, நமது அரசுகள் என்ன செய்யப்போகின்றன? தண்ணீரை தனியார் மயமாக்கப்போகின்றன!
  • ஆம், மத்திய அரசின் 2012 தேசிய நீர்கொள்கை அப்படித்தான் கூறுகிறது. அது தண்ணீரை விநியோகம் செய்யும் வேலையை, தனியாரிடம் வழங்க வேண்டும் என்கிறது. தண்ணீர் ஒரு வகை கடைச் சரக்காம்! அதற்கு விலை உண்டாம்! உப்பு, புளி, சோப்பு, பேஸ்ட் போல தண்ணீரும் ஒரு விற்பனைச் சரக்காம்! ஐ.எம்.எஃப்பும் உலக வங்கியும் போடும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு, இந்த அநியாயம் அரங்கேருகிறது.
  • இதிலென்ன அதிசயம்! ஏற்கனவே, புட்டி தண்ணீரை துட்டு கொடுத்துத்தானே வாங்குகிறோம் என்கிறீர்களா? உண்மைதான்! ஏற்கனவே கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் நம் நாட்டின் நிலத்தடி நீரை உறிஞ்சி நமக்கே புட்டி நீராகவும், கலரும் கரியமில வாயுவும் கலந்த குளிர்பானங்களாகவும் பல மடங்கு விலை வைத்து விற்று கொழுத்து வருகின்றன.
  • அந்த வகையில் 2012 நீர் கொள்கை அதன் நீட்சிதான். ஆனால், தற்போதைய அரசின் முடிவு, ‘மக்களுக்கான செயல்படும் நல அரசு’ என்ற கோட்பாட்டை முற்றிலும் கைக்கழுவி விட்ட ஒரு முடிவாகும்.
  • அன்று புத்தர் தண்ணீரை விலையில்லாததாகவும் (இலவசமானதாகவும்), மனித உயிர்களை விலைமதிப்பு மிக்கதாகவும் பார்த்தார். இன்று புத்தர் போதித்த நாட்டில் தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய விற்பனைச் சரக்காகிவிட்டது! மனித உயிர் மலிவானதாகிவிட்டது!
  • அழிவை உருவாக்கும் அணுகுண்டு சோதனைக்கு ‘புன்னகைக்கும் புத்தர்’ என பெயர் சூட்டியவர்கள் அல்லவா இவர்கள்!
  • இன்று உலக அளவில் தண்ணீரை விற்பனைப் பொருளாக்கி, அதை விநியோகிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே தென்அமெரிக்காவில் பொலிவியா, உருகுவே, உக்ரைன், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மக்கள் போராட்டம் நடந்துள்ளது; நடந்தும் வருகிறது.
  • இன்று இந்தியாவிலும் தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு அலை எழுந்து வருகிறது. கேரளத்தில் பிளாச்சிமாடா என்ற இடத்தில் உள்ளூர் நிர்வாகம் மக்களால் துரத்தியடிக்கப்பட்டது. தண்ணீரை தனியார்மயமாக்கும் தில்லி மாநில அரசின் முடிவை எதிர்த்து, 2005-ல் அம்மாநில மக்கள் போராடி வெற்றியும் பெற்றனர்.

தமிழகத்தில்…

  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோகோகோலா நிறுவனம் தாமிரபரணி தண்ணீரை, லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கு வாங்கி 12 ரூபாய் விலை வைத்து, நமக்கே விற்பனைச் செய்த கொடுமையை நாம் சகித்துக் கொண்டோம். அதன் விளைவு இன்று தண்ணீரை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தைரியமாக நடந்து வருகின்றன.
  • ஆயத்த ஆடை நகரமான திருப்பூரின் தண்ணீர் வினியோகம் ‘மெக்டெல்’ போன்ற தனியார் நிறுவனங்களிடம் மாட்டிக் கொண்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பில்லூர் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டத்தை தனியாருக்குவிட இருக்கிறார்கள். இதை எதிர்த்து அனைத்து கட்சிகள் அடங்கிய போராட்டக்குழு ஒன்று அங்கு களத்தில் இறங்கி உள்ளது.
  • தண்ணீரை தனியார்மயமாக்கும் பிரச்சினைகள் பத்து ஆண்டுப் பிரச்சினை. இதற்கு முன்பு இருந்தே இந்தியாவில் நூற்றாண்டு காலமாக நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அவை இந்திய தேசிய அரசியலை ஆட்டம் காணவைத்து வருகின்றன.
  • இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள தண்ணீர் தகராறுகள், உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இயற்கை, இனமொழி வேறுபாடில்லாமல் எல்லோருக்காகவும் சேவைகளை வழங்கி வருகிறது. உலகிலுள்ள ஆறுகளில் 276 ஆறுகள், ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் செல்கின்றன. அந்த வகையில் ஆறுகளுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட நாடும் தனிஉரிமை கோர முடியாது. இது நாடுகளுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்குட்பட்ட மாநிலங்களுக்கும் பொருந்தும்.
  • சிந்து நதி பஞ்சாபுக்கு மட்டும் சொந்தமல்ல, காவிரி கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமல்ல, கிருஷ்ணா நதி ஆந்திராவுக்கு மட்டும் சொந்தமல்ல.
  • இந்த சூழ்நிலையில் இந்த 2013ஆம் ஆண்டு ‘தண்ணீர் ஒத்துழைப்புக்கான சர்வதேச ஆண்டு’ஆக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் உலக தண்ணீர் தினத்தின் (கடந்த மார்ச் 22) நோக்கமும் தண்ணீருக்கான ஒத்துழைப்பை வலியுறுத்துவதாகவே அமைந்தது.
  • ஏற்கனவே, சொன்னது போல மூன்றாம் உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்கானதாகத்தான் இருக்கும் என்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபை 2013ஐ தண்ணீர் ஒத்துழைப்புக்கான சர்வதேச ஆண்டாக கடைபிடிக்க அறிவுறுத்தியது சரியானதே.
  • சிறப்பான நீர் மேலாண்மையின் மூலம் வெவ்வேறு தேவைகளுக்கும், முன்னுரிமைகளுக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்க ஒத்துழைப்பு (Co-operation) மிகவும் அவசியம். சாதாரண மக்களின் குழாயடிச் சண்டையாக இருந்தாலும் சரி, மாநிலங்களுக்கு இடையிலான அணைத் திறப்பு மோதல்களாக இருந்தாலும் சரி, நாடுகளுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, எல்லாமே தண்ணீர் தகராறுகள்தான். பிரச்சினை எதுவாக இருந்தாலும் அமைதி வழியிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளும், ஒத்துழைப்பும் மட்டுமே உருப்படியான பலன்களைப் பெற்றுத்தரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!