சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ஒரு விண்வெளி ஆய்வு திட்டமாகும். இது இந்தியாவின் மூன்றாவது சந்திராயன் திட்டம் மற்றும் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சந்திரயான் -1இன் திட்ட இயக்குநராக செயல்பட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. அவர்களின் நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
இஸ்ரோ தலைவர்: சோம்நாத்
கேள்வி: சென்றமுறை அடைந்த பின்னடைவில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? இந்தமுறை என்னென்ன மாற்றங்களை செய்திருக்கிறோம்?
பதில்: சந்திரயான்-2க்கும் சந்திரயான்-3க்கும் இடையில் கட்டுமான மாற்றங்கள் உள்ளன. சந்திரயான்-2 அதன் கடைசி நிமிடங்களில் நிலாவில் இறங்க முடியாமல் போய்விட்டது. அதில் 800 நியூட்டன் திறன் கொண்ட 5வது இன்ஜின் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது.
முழுமையான பரிசோதனைகள் செய்யப்படாமலே விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது சந்திரயான்-3இன் கட்டுமானத்தில் நான்கு இன்ஜின்கள் மட்டுமே பொருத்தப்படுமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான்-3க்கு முழு வடிவிலான ஆர்பிட்டர் கிடையாது. சந்திரயான்-2க்கான ஆர்பிட்டர் உள்ளது. அதையே பயன்படுத்திக் கொள்ளும். பூமியிலிருந்து ஜி.எஸ்.எல்.வி எதுவரை எடுத்துச் செல்கிறதோ அங்கிருந்து சந்திரயான்-2இன் ஆர்பிட்டர் நிலவுக்குச் செல்வதற்கான உந்துதலை வழங்கும். இதன் காரணமாக சந்திரயான் 2-இன் எடை குறையும் என்பதால் அதிக எரிசக்தியைக் கொண்டு செல்ல முடியும்.
கேள்வி: சென்றமுறை ஏற்பட்டது போல கடைசி நேர குழப்பங்களைத் தவிர்க்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
பதில்: திட்டமிடப்பட்டப் பாதையில், வேகத்தில், திசையில் மாறுபாடுகள் ஏற்பட்டால் அவற்றை உடனேயே சரி செய்வதற்கான ‘பிளான் B’ தயாராக உள்ளது.
அதாவது, சந்திரயான்-3 நிலவுக்குச் செல்வது ஒரேகட்டமாக திட்டமிடப்படவில்லை, பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டிய பிறகும் திசை, வேகம், பாதை ஆகியவை சரி பார்க்கப்படும். அவற்றில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால் அவை சரி செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்டத்துக்கு நகரும். இப்படிப்பட்ட திட்டமிடல் சந்திரயான்-2க்கு இருக்கவில்லை.
நிலவில் எங்கு இறங்க வேண்டும் எனக் குறிக்கப்பட்டிருக்கும் இறங்கு தளத்தின் அளவு இந்த முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-2க்கு இது 500 மீட்டருக்கு 500 மீட்டர் என்ற அளவில் இருந்தது.
ஆனால் தற்போது, 4.கி.மீக்கு 2.4 கி.மீ என்ற அளவில் தரையிறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இறங்கவேண்டிய இடத்தின் படங்களும் நிறைய எடுக்கப்பட்டுள்ளன. இவை பாதுகாப்பான இலகுவான தரையிறக்கத்தை உறுதி செய்யும்.
கேள்வி: சந்திரயான்-2 தரையிறங்கும்போது வேகமாக மோதியதுதான் அதன் தோல்விக்கு முக்கிய காரணம். அதைத் தவிர்க்க தற்போது என்ன செய்யப்பட்டுள்ளது?
பதில்: பாதுகாப்பாக இறங்க வேண்டும் என்பதற்காக வேகத்தைக் கணிக்கும் Laser Doppler Velocimeter எனும் கருவி சந்திரயான்-3இல் சேர்க்கப்பட்டுள்ளது. சந்திரயான்-2இல் இந்த கருவியைச் சேர்க்க முடியவில்லை.
சந்திரயான்-3 தரையிறங்கும்போது திட்டமிட்ட வேகத்தில் செல்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் முடியும், அப்படி இல்லை என்றால் அதை உடனே சரி செய்யவும் முடியும்.
இதில் 800 நியூட்டன் திறன் கொண்ட நான்கு திரஸ்டர்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் இரண்டு வேலை செய்யாமல் போனாலும்கூட, மற்ற இரண்டை வைத்து சந்திரயான் 3 தொடர்ந்து இயங்க முடியும்.
கேள்வி: சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலாவை எட்டிவிட்டால் முதலில் அது செய்யவுள்ளது என்ன?
பதில்: இது செல்ஃபி உலகம். ரோவர் பிரக்யானை, லேண்டர் விக்ரம் படம் எடுக்கும். விக்ரமை பிரக்யான் படம் எடுக்கும். இவை இரண்டையும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் படம் எடுக்கும்.
சந்திரயான்-2 ஆர்பிட்டரில் அமைந்துள்ள கேமரா 30.செ.மீ அளவில் மட்டுமே இருக்கும் பொருளைக்கூட படம் எடுக்கும் திறன் கொண்டது. ஆகையால், அதன்மூலம் சில நல்ல புகைப்படங்கள் கிடைக்கும் என நம்புகிறோம்.
சந்திரயான்-1 தரையிறங்கும்போது மூவர்ணம் தெரியும் வகையில் தகடு அனுப்பியிருந்தோம். ஆனால் அது சரியாகத் தெரியவில்லை. ஆனால், ரோவர் பிரக்யானின் ஆறு சக்கரங்களும் நிலாவில் பதியும்போது இது இந்தியாவுடையது என அடையாளம் காணும் வகையில், அதன் சக்கரங்களில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் அடையாளம் காணும் வகையிலான தேசிய முத்திரை பதியப்படும். அது என்ன முத்திரை என்பது சந்திரயான் நிலாவில் இறங்கும்போது அனைவருக்கும் தெரியும். அதன் புகைப்படங்களை லேண்டர் விக்ரம் எடுக்கும்.
கேள்வி: சந்திரயான்-3 மூலமாக என்ன ஆய்வுகள் செய்யப் போகிறோம்?
பதில்: நிலாவில் தொலை உணர்வில் மேற்கொண்டு வந்த ஆய்வுகளை இப்போது அதன் தரைப்பரப்பில் இறங்கி செய்யப் போகிறோம். சந்திரயான்-2 காலகட்டத்தின்போது திட்டமிட்ட அதே பணிகளைத்தான் சந்திரயான்-3 செய்யப் போகிறது.
நிலாவில் தண்ணீர் உள்ளது என தொலை உணர்வு மூலம் கண்டறிந்துள்ளோம். அதை மேலும் உறுதி செய்வதற்கான சான்றுகள் கிடைக்கலாம். அதாவது 100 கி.மீ. தூரத்தில் இருந்து அங்கே கிணறு உள்ளது எனக் கூறியுள்ளோம். ஆனால், கிணறு வெட்டினால்தானே அதை உறுதி செய்ய முடியும்?
நிலாவில் நிகழும் நில அதிர்வுகளின் செயல்பாடுகளும், துகள்களின் அயனியாக்கமும் ஆராயப்படும். சந்திரயான்-3 இறங்கும் இடத்தில் உள்ள மண்ணின் பண்புகள் ஆராயப்படும்.
வேற்று கிரகங்கள் குறித்த ஆய்வுக்கான போலாரிமீட்டர் என்ற கருவியின் திறன் நிலாவில் சோதித்துப் பார்க்கப்படும். போலாரிமீட்டர் எனும் கருவி நிலாவிலிருந்து 3 லட்சத்து 85 ஆயிரம் கி.மீ தூரத்திலிருந்து பூமியைப் பார்க்கும்.
அப்போது கிடைக்கும் தரவுகளைக் கொண்டு அந்தக் கருவியின் செயல்பாட்டை நாம் கணிக்க முடியும். சூரிய குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற நட்சத்திரமும் அதைச் சுற்றி கோள்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது குறித்த ஆய்வுக்கு இந்தக் கருவி உதவும்.
கேள்வி: சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: சந்திரயான்-3இல் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஏனென்றால் சந்திரயான்-3, சர்வதேச அரங்கில் நம்மை முக்கியமான இடத்தில் வைக்கும். நிலவின் தென் துருவத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட ரோவர் முதல் முறையாகத் தடம் பதிக்கப் போகிறது. இந்தியாவின் அடையாளம் நிலவின் தரையில் பதியும்.
சந்திரயான்-1இல் தடம் பதித்த இடத்தை ‘ஜவஹர் தல்’ எனப் பெயரிட்டிருந்தோம். சந்திரயான்-2 மோதிய இடத்தைச் சென்னையைச் சேர்ந்த இளம் மென்பொறியாளர் கண்டுபிடித்திருந்தார். அது அவரது பெயரில் உள்ளது. சந்திரயான்-3 நிலாவில் இறங்கும் இடத்துக்கும் பெயர் வைக்கப்படும்.
ஈலோன் மஸ்க் போன்றவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்வது, விண்வெளி சுற்றுலா என்று பேசுகிறார்கள். நிலவுக்கு மனிதன் விரைவில் மீண்டும் செல்வான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி: பல நாடுகளும் நிலவை ஆய்வு செய்கின்றனவே. அதில் நமக்கான இடம் என்ன?
பதில்: நாம் தனியாக கிரிக்கெட் விளையாட முடியாது. அனைவருடனும் சேர்ந்துதான் விளையாட வேண்டும். அதுபோல விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச நாடுகள் ஒன்று சேர்கின்றன. நாமும் அதில் அங்கம் வகிக்கப் போகிறோம்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் பூமிக்கு அருகில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை நிலாவில் அமையலாம். பூமிக்கு அருகில் இருப்பதைவிட நிலாவில் அமைவது அதன் செயல்பாடுகளை எளிமையாக்கும். அந்த முயற்சியில் இந்தியா முக்கியமான பங்கேற்பாளராக இருக்கும் என்பதை சந்திரயான்-3 உலகுக்கு தெரிவிக்கும்.
சந்திரயான் – 1 சாதித்தது என்ன?
சந்திரயான்-1 ஏவப்பட்ட போது, இஸ்ரோ ஆர்பிட்டரை மட்டுமே ஏவியதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், அப்போது ஆர்பிட்டருடன், மூன் இம்பாக்ட் ப்ரோப் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் (Moon Impact Probe) ஒன்றும் ஏவப்பட்டது.
சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்புக்கு ‘நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணத்தை’ அனுப்பி அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்தது.
நிலவின் மேற்பரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நிலவில் தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று அறிவித்தது. நிலவின் மேற்பரப்பில் அங்கு தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.
இந்தியாவில் இஸ்ரோ பெரிய அளவில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியதற்கு முன்பே, 1969 இல் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது.
அதன் பிறகு 1972 வரை நாசா 12 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அமெரிக்கா உட்பட வேறு எந்த நாடும் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் சந்திரயான் 1 மூலம் இஸ்ரோ ஏவிய, ‘நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம்’ அந்த சாதனையைப் படைத்தது.
நன்றி: BBC
Also Read: