சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி

சந்திரயான் 3: தொடங்கும் புதிய வரலாறு!

  • இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான் 3 ‘விக்ரம் தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது. 
  • இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்புக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது; விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்துவிட்டிருக்கிறது.
  • இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியிருக்கும் நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. 

நிலவில் ஆய்வு

  • குறிப்பாக, நிலவின் தென் துருவத்தை அடைவதில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வை நோக்கிய உலக நாடுகளின் கவனத்தைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
  • நிலவைச் சுற்றிவரும் சுற்றுப்பாதைத் திட்டமான ‘சந்திரயான் 1’, 2008இல் வெற்றிபெற்றது. 2019இல் செலுத்தப்பட்ட ‘சந்திரயான் 2’ சுற்றுப்பாதைக் கலம், தரையிறங்கிக் கலம், உலாவி ஆகிய மூன்றையும் ஒருசேர நிலவை நோக்கி அனுப்ப முயன்றது. 
  • அதன் சுற்றுப்பாதைக் கலம் வெற்றிகரமாக நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது; ஆனால், தரையிறங்கும் முயற்சி கடைசி நொடியில் தோல்வியில் முடிந்தது. 

‘சந்திரயான் 3’ திட்டம்

  • விட்ட இடத்தில் தொடங்கி, மென்மையாகத் தரையிறங்கும் கலத்தையும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வுசெய்ய உலாவியையும் அனுப்பிச் சோதனை செய்வதுதான் ‘சந்திரயான் 3’ திட்டம்.
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய பல்வேறு மேம்பாடுகளுடன் கூடிய சந்திரயான் 3 விண்கலத்தை, ரூ.615 கோடி என்கிற மிகக் குறைவான மதிப்பீட்டில் இஸ்ரோ வடிவமைத்தது. சுமார் 1,000 இஸ்ரோ விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பங்களித்துள்ள சந்திரயான் 3 இன் திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடமும் ஐரோப்பிய நாடுகளிடமும் இருப்பதுபோல நிலவுக்கு விரைவாகச் செல்லும் அதிஆற்றல் வாய்ந்த ஏவூர்தி இந்தியாவிடம் இல்லை; அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் மூன்று நாள்களிலும் சீன விண்கலம் ஐந்து நாள்களிலும் நிலவை அடைந்தன.
  • இந்தப் பின்னணியில், எல்விஎம் 3 ஏவூர்தி மூலம் ஜூலை 14 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள 3.84 லட்சம் கி.மீ. தூரத்தை 41 நாட்களில் சென்றடைந்துள்ளது. 
  • இந்திய நேரப்படி, ஆகஸ்ட் 23 மாலை 6.03 மணிக்கு நிகழ்ந்த தரையிறக்கத்தை, சுமார் 80 லட்சத்து 60 ஆயிரம் பேர் யூடியூப்-இல் நேரலையில் பார்வையிட்டனர்; மிக அதிகம் பேர் பார்வையிட்ட யூடியூப் நேரலையாக இது வரலாற்றில் பதிவானது.

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியப் பணி

  • நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வுசெய்வது சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியப் பணி.
  • சந்திரயான் 3 இன் வெற்றிகரமான தரையிறக்கம், வயது வேறுபாடின்றி எல்லாத் தரப்பினரிடமும் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. 
  • சுதந்திர இந்தியாவின் முன்னோடிகள், அறிவியல் மனோபாவத்துடன் முன்னெடுத்த தொலைநோக்குத் திட்டங்களின் மேம்பட்ட பலன்களைத்தான் இப்போது நாம் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். 
  • அந்த அறிவியல் மனோபாவத்தைத் தக்கவைப்பதன் மூலம், அனைவருக்குமான சமத்துவ வாழ்க்கையை உறுதிசெய்ய வேண்டியது இந்தியாவின் இன்றைய, நாளைய தலைவர்களின் தலையாய கடமையாகும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!