புறநானூறு- 2 பிசிராந்தையார்

பிசிரந்தையார்

  • பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
  • ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்.
  • பிசிரந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் அறிவுடை நம்பி.
  • அரசனுக்கு அறிவுரை செல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் பிசிரந்தையார் ஆவார்.

 திணை: பாடாண்.

துறை: செவியறிவுறூஉ.

செவியறிவுறூஉ துறை

  • அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன்  கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்

 பாடல் –184

* காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மா நிறைவு

இல்லதும், பல் நாட்கு ஆகும்

நூறு செறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே

வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே யாத்து, நாடு பெரிது நந்தும்

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவு தப எடுக்கும் பிண்டம்

நச்சின், யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பிசிரந்தையார்

பா வகை : நேரிசை ஆசிரியப்பா

பாடலின் பொருள்

  • ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்
  • நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
  • அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
  • அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது.
  • அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

சொல்லும் பொருளும்

  • காய் நெல் – விளைந்த நெல்.
  • செறு – வயல்
  • புக்கு – புகுந்து
  • நந்தும் – தழைக்கும்
  • கல் – ஒலிக் குறிப்பு
  • தப  – கெட
  • நச்சின் – விரும்பினால்
  • மா – நில அளவு (ஓர் ஏக்கரில் 1/3 மூன்றில் ஒரு பங்கு).
  • தமித்து  -தனித்து
  • யாத்து – சேர்த்து
  • வரிசை – முறைமை
  • பரிவு – அன்பு
  • பிண்டம் – வரி

பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிரந்தையார் கூறிய அறிவுரை

குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே சிறந்த அரசன்.

நாட்டு நலனையும் நிருவாகச் சீர்மையையும் பாடுவனவாக செவியறிவுறூஉ என்னும் துறைப்பாடல்கள் உள்ளன.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!