மணிமேகலை

மணிமேகலை

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை, மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது.
  • மணிமேகலை (முப்பது) 30 காதைகளகாக அமைந்துள்ளது.
  • மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை.
  • மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
  • பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை,
  • கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்.
  • சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும், நிறைந்தது மணிமேகலை.

சீத்தலைச் சாத்தனார்

  • மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சீத்தலைச் சாத்தனாரது இயற்பெயர் சாத்தன் ஆகும்.
  • சீத்தலைச் சாத்தனார் திருச்சியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்தவர்.
  • கூல (தானியம்) வாணிகம் செய்தவர் சீத்தலைச் சாத்தனார். இதன் காரணமாக இவரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார்.

இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும்

  • சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளும் மணிமேகலையை இயற்றிய கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் சமகாலத்தவர்கள்.
  • தண்டமிழ் ஆசான், நன்னூற்புலவன், சாத்தன் என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் இளங்கோவடிககள்.

புகார் நகர இந்திரவிழா

  • மக்களின் வாழ்வில் பிறந்தது முதலாக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் விழா, தனக்கென ஒரு தனியிடம் பெறுகிறது.
  • மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது
  • அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் விழாதான்.
  • அவ்வகையில் புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த இந்திர விழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது.

மணிமேகலை – விழாவறை காதை – சீத்தலைச் சாத்தனார்

பாடல் – 11-18 * *

மெய்த்திறம் வழக்கு * *

நன்பொருள் வீடெனும் இத்திறம் தத்தம் இயல்பினிற்

காட்டும் சமயக் கணக்கரும்

தந்துறை போகிய அமயக் கணக்கரும் **

அகலாராகிக் கரந்துரு எய்திய கடவுளாளரும் பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும் **

ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்

சொல்லும் பொருளும்

  • கூலம் – தானியம்
  • பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள்
  • சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
  • குழீஇ – ஒன்று கூடி

பாடலின் பொருள்

இந்திர விழாவைக் காண வந்தோர் உயர்வுடைய புகார் நகரில்

மெய்ப்பொருள் உணர்த்தும் உலகியல், தத்துவம், வீடுபேறு ஆகிய பொருள்களை அவரவர் இயற்கைத் தன்மைக்கு ஏற்ப விளக்குபவராகிய சமயவாதிகள் கூடியிருக்கின்றனர்.

தமது நெறியில் சிறந்தவராக விளங்கும் காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும் காலக்கணிதரும் கூடியிருக்கின்றனர்.

இந்நகரை விட்டு நீங்காதவராய்த் தம் தேவருடலை மறைத்து மக்கள் உருவில் வந்திருக்கும் கடவுளரும்

கடல்வழி வாணிகம் செய்து பெரும் செல்வம் காரணமாய்ப் புகார் நகரில் ஒன்று திரண்டிருக்கும் பல மொழி பேசும் அயல் நாட்டினரும் குழுமியிருக்கின்றனர்.

அரசர்க்குரிய அமைச்சர் குழுவாகிய ஐம்பெருங்குழு, எண்பேராயத்தைச் சேர்ந்தவர்களும் அரசவையில் ஒன்று திரண்டியிருக்கின்றனர்

ஐம்பெருங்குழு

  1. அமைச்சர்
  2. தூதர்
  3. படைத்தலைவர்
  4. சாரணர் (ஒற்றர்)
  5. சடங்கு செய்விப்போர்

எண்பேராயம்

  1. கரும விதிகள்
  2. காரணத்தியலவர்
  3. கனகச் சுற்றம்
  4. நகர மாந்தர்
  5. கடைக் காப்பாளர்
  6. இவுளி மறவர்
  7. யானை வீரர்
  8. படைத் தலைவர்

விழா முன்னேற்பாடுகள் பற்றி அறிவித்தல்

பாடல் – 43-53

  • தோரண வீதியும் தோம்அறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
  • காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
  • பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
  • விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்
  • கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்

சொல்லும் பொருளும்

  • தோம் – குற்றம்
  • கோட்டி – மன்றம்
  • பொலம் – பொன்
  • வேதிகை – திண்ணை
  • தூணம் – தூண்
  • தாமம் – மாலை
  • நாற்றுமின் – தொங்கவிடுங்கள்
  • கதலிகைக் கொடி – சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது
  • காமூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
  • விலோதம் – துணியாலான கொடி

பாடலின் பொருள்

“தோரணம் கட்டிய தெருக்களிலும் குற்றமில்லாத மன்றங்களிலும் பூரண கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு மற்றும் பலவகையான மங்கலப் பொருள்களை முறையாக அழகுபடுத்தி வையுங்கள்.

குலை முற்றிய பாக்கு மரத்தையும் வாழை மரத்தையும் வஞ்சிக் கொடியையும் பூங்கொடிகளையும் கரும்பையும் நட்டு வையுங்கள்.

வீடுகளின் முன் தெருத் திண்ணையில் வரிசை வரிசையாக இருக்கும் தங்கத் தூண்களிலே முத்து மாலைகளைத் தொங்கவிடுங்கள்.

விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்.

துகில் கொடிகளையும் கம்புகளில் கட்டிய பெரிய மாடங்களிலும் மாடங்களின் வாயில்களிலும் சேர்த்துக் கட்டுங்கள்.

பட்டிமண்டபம் ஏறிமின்

பாடல்-58-72

தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய

நல்லுரை அறிவீர் பொருந்துமின்

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் * *

பாடலின் பொருள்

ஏறுமின் குளிர்ந்த மணலை பரப்பிய பந்தல்களிலும் மரங்கள் தாழ்ந்து நிழல் தரும் ஊர் மன்றங்களிலும் நல்லன பற்றிச் சொற்பொழிவு ஆற்றுங்கள்.

அவரவர் சமயத்திற்கு உரிய உட்பொருளறிந்து வாதிடுவோர் பட்டிமண்டப முறைகளைத் தெரிந்து வாதிட்டுத் தீர்வு காணுங்கள்.

சினமும் பூசலும் கைவிடுக

பாடல்

பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும்

செய்யாது அகலுமின்

வெண்மணற் குன்றமும் விரி பூஞ்சோலையும்

தண்மணல் துருத்தியும் தாழ்பூந்துறைகளும்

தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும் நாலேழ்

நாளினும் நன்கறிந்தீர் என – ஒளிறுவாள்

சொல்லும் பொருளும்

  • செற்றம் – சினம்
  • கலாம் – போர்
  • துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே  இருக்கும்)
  • நாலேழ் நாள் – 28 நாள்

பாடலின் பொருள்

  • மாறுபாடு கொண்ட பகைவர்களிடம் கூடக் கோபமும் பூசலும் கொள்ளாது அவர்களை விட்டு விலகி நில்லுங்கள்.
  • வெண்மையான மணல் குன்றுகளிலும் மலர் சொறிந்த பூஞ்சோலைகளிலும் குளிர்ந்த ஆற்றிடைக் குறைகளிலும் மரக்கிளைகள் நிழல் தரும் தண்ணீர்த துறைகளிலும் விழா நடைபெறும்
  • அந்த (இருபத்தெட்டு) நாள்களிலும் தேவரும் மாக்களும் ஒன்றுபட்டு மகிழ்வுடன் உலாவி வருவர் என்பதை நன்கு அறியுங்கள்.” * *

பாடல்

மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண் முரசு இயம்பி

பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் ***

பாடலின் பொருள்

  • ஒளி வீசும் வாள் ஏந்திய காலாட்படையினரும் தேர்ப்படையினரும் குதிரைப்படையினரும் யானைப் படையினரும் சூழ்ந்து வர, அகன்ற முரசினை அறைந்து.
  • “பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் பெருகுவதாகுக” என வாழ்த்தி
  • மேற்கண்ட செய்திகளை நகருக்கு முரசு அறைவோன் அறிவித்தான்.

சொல்லும் பொருளும்

  • வசி – மழை
  • சாரணர் –  ஒற்றர்

பசிப்பிணி போக்கிய பாவைநாடகம்

“தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.

உணவு

  • உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு.
  • உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன.
  • உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது.
  • பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே சிறந்த அறமாகும்.

காட்சி – 1

மணிபல்லவத் தீவில் மணிமேகலை, தீவதிலகை சந்திப்பு

  • அமுதசுரபி பாத்திரம் தோன்றும் வைகாசி முழுநிலவு நாள் அன்று மணிமேகலை மணிபல்லவத் தீவில் தீவதிலகையை சந்திக்கிறாள்.
  • தான் பூம்புகார் நகரைச் சேர்ந்தவள் என்றும் தன் பெயர் மணிமே லை என்றும் தெரிவிக்கிறாள்.
  • அதற்கு தீவதிலகை தான் மணிபல்லவத் தீவையும் அங் கூறுகிறாள். ள்ள புத்த பீடிகையையும் காவல் காப்பதாக கூறுகிறாள்
  • பின் பெருமை மிக்கவர்கள் மட்டுமே மணிபல்லவத் தீவிற்கு வந்து புத்த பீடிகையை வணங்க முடியும் என்றும் அத்தகைய பெருமையை மணிமேகலை பெற்றிருப்பதாகவும் தீவதிலகை கூறினாள்.
  • பின் தீவதிலகை மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகி பொய்கையை மணிமேகலைக்கு காட்டி கோமுகி என்பதற்கு கோ என்றால் பசு. முகி என்றால் முகம் என்று விளக்கம் கூறினாள்.
  • மேலும் வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் தோன்றும் என்றாள்.
  • அப்போது பொய்கையின் நீருக்குமேல் அப்பாத்திரம் தோன்றுகிறது. அதனை மணிமேகலை வணங்கிக் கையில் எடுக்கிறாள்
  • மணிமேகலையே! யிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய் இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக! என்று தீவதிலகை நல்வாழ்த்து கூறினாள்.
  • மணிமேகலை தீவதிலகையை வணங்கி அமுதசுரபியுடன் விடை பெற்று, பூம்புகாருக்குத் திரும்பி, ஆதிரையிடம் உணவு பெறச் செல்கிறாள்.

காட்சி – 2

ஆதிரையின் வீட்டு வாயிலில் அமுதசுரபியுடன் மணிமேகலை

மணிமேகலை

  • மணிமேகலை தான் பூம்புகாரில் வாழ்ந்த கோவலன், மாதவி ஆகியோரின் மகள் என்றும் உங்களின் (ஆதிரை) சிறப்பை அறிந்து இப்பாத்திரத்தில் உணவு பெற வந்தேன் என்றாள்.
  • இஃது அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் ‘அமுதசுரபி’ ஆகும்.
  • அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம் . உணவு கொடுத்தவர்களே உயிரைக்கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்.
  • இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் என்றாள்.

ஆதிரை

  • அதற்கு ஆதிரை மிகவும் மகிழ்ச்சியடைந்து உங்கள்(மணிமேகலையே) அறம் செழிக்கட்டும். பசிநோய் ஒழியட்டும். என்று அப்போதே அமுதசுரபியில் உணவை இடுகிறாள்.
  • அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு மணிமேகலை உணவு அளிக்கிறாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிடுகிறாள்.

காட்சி –3

மணிமேகலையையும் சிறைக்காவலரும் மன்னரும்

சிறைக்காவலர்

வேந்தே! வணக்கம் இன்று காலை நம் சிறைச்சாலைக்கு இளம்பெண் ஒருத்தி வந்தாள் அவள் கையில் ஒரு சிறிய பாத்திரம் இருந்தது. அந்தச் சிறிய பாத்திரத்திலிருந்து உணவை அள்ளி அள்ளிச் சிறையில் இருந்த அனைவருக்கும் வழங்கினாள். ஆனால், அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவு குறையவே இல்லை என்று சிறைக்காவலர் தெரிவித்தனர்.

மன்னர்

  • என்ன! ஒரு சிறிய பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து அத்தனை பேருக்கும் வழங்கினாளா ? அப்பெண்ணை உடனே அழைத்து வா என்று மன்னர் கூறினார். பெண்ணே! நீ யார்? உணவு அள்ள அள்ளக் குறையாத இப்பாத்திரத்தின் பெயர் என்ன? இஃது உனக்கு எப்படிக் கிடைத்தது?
  • மாதவம் செய்தவளே(மணிமேகலை)! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய் என்று மன்னர் வாழ்த்தினார்.
  • நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்று மன்னர் கேட்டார்.

மணிமேகலை மன்னரிடம் வேண்டுகோள்

  • சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.
  • சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.
  • வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது.
  • எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
  • மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா என்றாள்.

மன்னர்

நல்லறம் புரியும் நங்கையே(மணிமேகலை)! உன் வேண்டுகோள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த ஆணை இடுகிறேன். நீ வாழ்க! உன் அறம் வளர்க! என்று மன்னர் கூறினார்.

மணிமேகலை வணங்கி விடைபெற்றாள்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

உலக உயிர்களுக்கு உண்டியும் உடையும் உரையுளும் கொடுப்பது எதுவென மணிமேகலை சுட்டுகிறது?
(A) தானம்
(B) உதவி
(C) அறம்
(D) இன்பம்
(E) விடை தெரியவில்லை

‘கோவலன் பொட்டல்’ என வழங்கப்படும் இடம்
(A) கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
(B) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
(C) கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
(D) கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்

“இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்” -இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) சீவகசிந்தாமணி
(B) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(D) கம்பராமாயணம்

சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) குண்டலகேசி
(D) வளையாபதி

சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
(A) மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
(B) சிலப்பதிகாரமும், வளையாபதியும்
(C) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
(D) மணிமேகலையும் வளையாபதியும்

‘தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்’ என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
(A) கம்பர்
(B) இளங்கோவடிகள்
(C) திருத்தக்க தேவர்
(D) காரியாசான்

மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
(A) எட்டு
(B) ஏழு
(C) பத்து
(D) ஒன்பது

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
(A) சீவகசிந்தாமணி
(B) மணிமேகலை
(C) குண்டலகேசி
(D) நீலகேசி

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் 1- மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்” இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
(A) சிலம்பு
(B) கம்ப இராமாயணம்
(C) மணிமேகலை
(D) பெரிய புராணம்

‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ மணிமேகலையில் -காதையாக உள்ளன.
(A) இருபதாவது
(B) இருபத்து நான்காவது
(C) இருபத்தேழாவது
(D) இருபத்தொன்றாவது

‘மணிமேகலை’ – அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
(A) மணிமேகலா தெய்வம்
(B) சுதமதி
(C) தீவதிலகை
(D) அறவண அடிகள்

முதல் சமய காப்பியம் எது?
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) வளையாபதி
(D) குண்டலகேசி

மணிமேகலையின் தோழி
(A) தீவதிலகை
(B) சுதமதி
(C) மாதரி
(D) வீணாபதி

‘பட்டிமண்டபம்’ என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) நீலகேசி
(D) குண்டலகேசி

மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
(A) 10
(B) 20
(C) 30
(D) 40

“முற் பிறப்பினை உணர்ந்தவளாகக்” குறிப்பிடப் படுபவள்
(A) கண்ணகி
(B) மணிமேகலை
(C) மாத்வி
(D) மாதரி

யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
(A) கவுந்தியடிகள்
(B) மாதவி
(C) அறவணவடிகள்
(D) கண்ணகி

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!